பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கத்தொடங்கியதும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக உள்நாட்டு, சர்வதேச விமானப்போக்குவரத்தை அந்நாடு முடக்கியது. கரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையிலும், ஊரடங்கு காரணமாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்துவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
இதன்படி, உள்நாட்டு விமான சேவையையும் பகுதியளவு செயல்பட பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத், குவெட்டா, பெஷாவார் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து உள்நாட்டு விமானங்கள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமானங்களில் பயணிக்க விரும்பும் பயணிகளின் உடல் வெப்ப நிலை பரிசோதனை, உடல் நலம் பற்றிய சுய தகவல் ஆகியவை பெற்ற பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். விமானங்களில் 50 சதவீத அளவுக்கே பயணிகள் பயணிக்க அனுமதி அளிக்கப்படும் போன்ற நிபந்தனைகள் பின்பற்றப்படும் என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயுரத்து 581 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 799ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ‘தனியார் பங்களிப்பின் மூலம் இஸ்ரோவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்’ - மயில்சாமி அண்ணாதுரை