இஸ்லாமிய இறை தூதராக அறியப்படும் முஹம்மது நபி குறித்து வெளிவரும் கேலிச்சித்தரங்களைப் பற்றிய விவாதத்திற்கு பிரான்ஸ் நாட்டிலுள்ள ஒரு ஆசிரியர் முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து பேசிய பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், "இந்த பயங்கரவாத தாக்குதல் கடுமையாகக் கண்டிக்கதக்கது. இந்தத் தாக்குதலால் நம் தேசம் பிளவுபடக்கூடாது. ஏனென்றால், பயங்கரவாதிகளின் விருப்பமும் அதுதான்.
இஸ்லாமிய பிரிவினைவாதத்தை பிரான்ஸ் என்றுமே எதிர்க்கும். பிரான்சில் இருக்கும் சில இஸ்லாமியக் குழுக்கள் பிரிவினைவாதத்தை நோக்கி நகர்கின்றனர்" என்றார்.
இம்மானுவேல் மக்ரோனின் இந்தக் கருத்திற்கு சர்வதேச அளவில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், பிரான்ஸ் அதிபரின் விமர்சனத்தைக் கண்டிக்கும் வகையில், பாகிஸ்தான் நாட்டிலுள்ள பிரான்ஸ் தூதர் நேரில் ஆஜராகும்படி பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான், "மனிதர்களை பிரிப்பதைக் காட்டிலும், மண்டேலாவைப் போல அவர்களை ஒன்றிணைப்பதுதான் ஒரு தலைவரின் தனிச்சிறப்பு. இந்த சமயத்தில் பிரான்ஸ் அதிபர் மக்ரோன், பொதுமக்களை மேலும் பிளவுபடுத்தாமல் பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்.
இஸ்லாம் மதத்தைப் பற்றி தெளிவான புரிதலின்றி இவர் முன்வைத்துள்ள விமர்சனத்தின் மூலம், உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான இஸ்லாமியர்களின் உணர்வுகளை அவர் காயப்படுத்தியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோவிட்-19 இரண்டாம் அலையால் திணறும் பிரான்ஸ்; மீண்டும் லாக்டவுன்?