சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று நாளடைவில், அந்நாட்டில் குறைந்திருந்தாலும் தற்போது மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பாகிஸ்தானில் முதல்முதலில் பிப்ரவரி 26ஆம் தேதி உறுதி செய்யபட்டது.
அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அந்நாட்டில் ஜூன் 30ஆம் தேதி வரை பகுதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, " நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,646 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாகிஸ்தானில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 317 பேர் இதுவரை கோவிட்-19 பெருந்தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்படுகிறது.
அவர்களில் அதிகபட்சமாக சிந்த் மாகாணத்தில் 39,555 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 40,819 பேரும், கைபர் பக்துன்வா மாகாணத்தில் 14,006 பேரும், பலூசிஸ்தான் மாகாணத்தில் 6,788 பேரும், தலைநகர் இஸ்லாமபாத்தில் 5,785 பேரும், கில்கித் பல்திஸ்தானில் 952 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 412 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் இப்பெருந்தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 105 பேர் உயிரிழந்தனர். இதன் மூலமாக, உயிரிந்தோரின் எண்ணிக்கை 2,172ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 35 ஆயிரத்து 18 பேர் இத்தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று (ஜூன் 8) ஒரே நாளில் நாடு முழுவதும் 24,620 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், பாகிஸ்தானில் இதுவரை 7 லட்சத்து 30 ஆயிரத்து 453 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையின் காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் போதாது எனும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. குறிப்பாக, ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் கரோனா பரவல் வேகம் உச்சத்தைத் தொடும் என மருத்துவ வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவல் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, நாட்டில் அதிகரித்துவரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுக்கு ஜப்பான், துருக்கி, அரசுகள் உதவுமென நட்புக்கரம் நீட்டியுள்ளன.