கரோனா பாதிப்பிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக ஆஸ்திரேலிய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கரோனா பாதித்த நபர்களுக்காகவும், கரோனா பாதித்த நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களையும் எளிதில் கண்டறியும் வகையில், புதிதாக கோவிட் சேப் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்தச் செயலியை அறிமுகப்படுத்திய 12 மணி நேரத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தரவிறக்கம் செய்துள்ளனர்.
இதுகுறித்து தலைமை சுகாதார அலுவலர் டாமியன் மர்பி கூறுகையில், "இந்தச் செயலி சீக்கிரமாக மக்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்துள்ளது. இந்தச் செயலி கரோனா காலத்தில் எவ்வாறு செயல்படுவது என்பதையும், மக்களின் தனிப்பட்ட விவரங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்தும் மக்களுக்குத் தெரியப்படுத்தும்.
சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் வைரஸ் பாதிப்புகளை விரைவாகக் கண்டறிந்து, தொற்று இல்லாத ஆஸ்திரேலிய நாடாக மீண்டும் மாறுவோம் என அரசு நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளை மீண்டும் தொடரவுள்ளது" என்றார்.
இதுவரை ஆஸ்திரேலியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 720 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சவுதியில் சிறார்களுக்கு விதிக்கப்படும் மரண தண்டனை ரத்து!