ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி யுவோன் ஜான்சன். இவர் இலங்கையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது ஜூட் ஜெயமஹா என்பவரால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரின் மண்டைஓடு 64 துண்டுகளாக சிதைக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் 2005ஆம் ஆண்டு நடந்தது.
இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், ஜூட் ஜெயமஹாவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கொலை குற்றத்தின் தீவிரம் கருதி, ஜெயமஹாவுக்கு 2014ஆம் ஆண்டு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து அவர் அந்நாட்டின் அதிபருக்கு பொதுமன்னிப்பு கோரி மனு அளித்தார். தற்போது அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அதிபர் சிறிசேன வெளியிட்டுள்ளார்.
இது அந்நாட்டில் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஜெயமஹா செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு சாதகமாக நீதி திரும்பியுள்ளதாக சமூக வலைதளத்தில் கருத்துகள் காட்டுத்தீப் போன்று வேகமாகப் பரவிவருகின்றன.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கொலையுண்ட யுவோன் ஜான்சனின் சகோதரி, "கொலை குற்றவாளி இதுவரை எந்த வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை. இது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். தோல்வியுற்ற அதிபரின் கொடூரமான செயல் இது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: இலங்கையில் தமிழர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு!