2001 செப்டம்பர் 11, நியூயார்க்
...பரபரப்பான நியூயார்க் நகரில் திடீரென வானமே இடிந்துவிழுவது போல் ஒரு பெருஞ்சத்தம். அச்சம் கலந்த குழப்பத்தோடு சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்த நியூயார்க் வாசிகள், உலக வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரம் புகைந்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அது என்னவென்று கிரகித்துக்கொள்வதற்குள் நியூயார்க் நகரவாசிகளுக்கு மற்றுமொரு அதிர்ச்சி. உலக வர்த்தக மையத்தின் மற்றொரு (தெற்கு) கோபுரத்தின் மீது எங்கிருந்தோ வந்த விமானம் ஒன்று மோதி வெடித்தது. சிலநொடிகளில் தாக்குதலுக்குள்ளான இரண்டு கோபுரங்களும் அடுத்தடுத்து சீட்டுக்கட்டுபோல் சரிந்து விழுந்தது.
அமெரிக்கா, உலக நாடுகளின் பொருளாதார நாடித்துடிப்பாய் செயல்பட்டு வந்த அந்த இரட்டை கோபுரங்கள் கண்ணிமைக்கும் நொடிகளில் தரைமட்டமானது. மக்களின் மரண ஓலங்கள் விண்ணை முட்டின. எங்கு திரும்பினாலும் அழுகுரல் நெஞ்சை அடைத்தது. தொலைத்தொடர்புகள், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நியூயார்க் நகரமே ஸ்தம்பித்துப் போனது.
இதனிடையே, தலைநகர் வாஷிங்டனில் பென்டகன் (அமெரிக்க ராணுவத் தலைமையகம்), பென்சில்வேனியா மாகாணத்தின் ஷாங்விலி (Shankville) அருகே உள்ள விவசாய நிலம் ஆகிய இரு இடங்களில் அடுத்தடுத்து இரண்டு விமானங்கள் மோதி வெடித்தன.
உலகநாடுகளை ஆட்டிப்படைத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆட்டம் கண்டது. மோசமான பின்விளைவுகளையும், உலக அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்திய இந்த கொடூரத் தாக்குதலை அரங்கேற்றியது ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்குவைதா பயங்கரவாதிகளாவர்.
தாக்குதலை எப்படி அரங்கேற்றினர் ?
19 அல்குவைதா பயங்கரவாதிகள் நான்கு குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு இடங்களுக்குச் செல்லும் நான்கு விமானங்களை நடுவானில் கடத்தினர்.
போஸ்டனில் இருந்து லாஸ் ஏன்ஜல்ஸ் நகருக்கு சென்றுகொண்டிருந்த 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஃபிளைட் 11', 'யுனைட்டட் ஃபிளைட் 175' ஆகிய விமானங்கள் இரட்டை கோபுரத்தை நோக்கி இயக்கப்பட்டன.
சரியாக காலை 8:46 மணிக்கு உலக வர்கத மையத்தின் வடக்கு கோபுரத்தை ஃபிளைட் 11 மோதி வெடித்தது. அடுத்து, காலை 9:03 மணிக்கு ஃபிளைட் 175 தெற்கு கோபுரத்தைத் தாக்கியது.
இதனிடையே, டல்லஸ் (Dulles) நகரிலிருந்து லாஸ் ஏன்ஜல்ஸ் நோக்கிச்சென்ற 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஃபிளைட் 77' விமானம் தலைநகர் வாஷிங்டனில் உள்ள பென்டகன் கட்டடத்தின் மீது சரியாக 9:37 மணிக்கு மோதியது.
நியூயார்க்ல் (New York) இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கிச் சென்ற 'யுனைடட் ஏர்லைன்ஸ் ஃபிளைட் 93' என்ற விமானம் பென்சில்வேனியா அருகே ஷாக்ஸ்விலி நகர் அருகே விவசாய நிலத்தில் சரியாக 10:03 மணிக்கு விழுந்து நொறுக்கியது.
பலவருட திட்டமிடப்பட்ட இத்தாக்குதலை கலில் ஷேக் முகமது என்பவர் செயல்படுத்தினார். இதற்கு மறைந்த முன்னாள் அல்குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன் மூளையாகச் செயல்பட்டார்.
இந்த தாக்குதலுக்கு எவ்வளவு செலவானது:
அமெரிக்க அரசால் அமைக்கப்பட்ட '9/11 ஆணையம்' நடத்திய தீவிர விசாரணையில், இந்த சதித்திட்டத்துக்கு சுமார் 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இன்றைய இந்திய மதிப்பின்படி 2 கோடியே 86 லட்சத்து 77 ஆயிரத்து 666 ரூபாய்) செலவு செய்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பணம் எங்கிருந்து வந்ததது என இதுவரை கண்டறியப்படவில்லை.
எத்தனை பேர் உயிரிழந்தனர் ?
விமானத்தில் சென்ற பயணிகள் உட்பட (பயங்கரவாதிகளைச் சேர்க்காமல்) பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள் எனக் கிட்டத்தட்ட மூன்றாயிரம் அப்பாவிகள் கொல்லப்பட்டனர். ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்து பல ஆண்டுகள் கழித்து, புற்றுநோய், சுவாசக்கோளாறு உள்ளிட்ட காரணங்களால் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
தாக்குதலின் பின்னணி ?
செப். 11 தாக்குதலுக்கு பொறுப்பேற்று கடந்த 2002ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு பின் லேடன் அனுப்பியிருந்த கடிதத்தில் கீழ்காணும் காரணங்களை பட்டியலிட்டிருந்தார்.
- இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பது
- ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள்
- சோமாலியாவில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதற்குத் துணை நிற்பது
- அமெரிக்க ஆதரவு அரசாங்கங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கு
- காஷ்மீரில் இஸ்லாமியர்கள் மீது அடக்குமுறை செலுத்தும் இந்தியாவுக்கு ஆதரவளிப்பது
- லெபனனில் இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகளுக்கு ஆதரவளிப்பது
- சேச்சினியாவில் இஸ்லாமியர்கள் மீதான ரஷ்ய வன்முறைக்கு ஆதரவளிப்பது
பின்விளைவுகள்:
செப்டம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 'பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை (War on Terror) அறிவித்தார். பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா என அடுத்தடுத்து போரில் அமெரிக்கா குதித்தது. இதுவரை, லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
போர்ச் சூழலால் மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் பொருளாதாரத்தில் நலிவுற்று மேற்கத்திய நாடுகளைச் சார்த்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஒரு தீவிரவாத தாக்குதல் அமைதியை, அரசியலை, பொருளாதாரத்தை எந்தளவுக்கு சீர்ழிக்கும் என்பதற்கு 'செப்டம்பர் 11' தாக்குதலே சிறந்த எடுத்துக்காட்டாகும்.