ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது. இருதரப்புக்குமிடையே அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தாலும், அவ்வப்போது ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்திக்கொள்கின்றனர். குறிப்பாகப் பாதுகாப்புப் படை வீரர்களையும், காவல் துறையினரையும் குறிவைத்து தாலிபான் அமைப்பு தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்திவருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பொதுமக்கள் கூடியிருந்த பகுதியில் திடீர் என காரில் இருந்து பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் கான் முகமது வர்தக் உட்பட குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக காபூலின் தலைநகரில் நடத்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சமீபத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடத்திய தாக்குதலில் 50 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த சனிக்கிழையன்று ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளவாடத்தில் 12 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவை அச்சுறுத்த தாலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் நல்வாய்ப்பாக உயர் சேதம் எதுவும் இல்லை.