அமெரிக்கா, தென் கொரியா நாடுகள் கிழக்கு கடலில் ராணுவக் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டுவருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் வடகொரியா, கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் கிழக்கு கடலை நோக்கி பல்வேறு ஏவுகணை சோதனை மேற்கொண்டுவருகின்றது.
இதன் தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை நேற்று சோதனையிட்டதாக வடகொரியா மீது தென் கொரியா புகார் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இதனை உறுதிபடுத்தும் வகையில், அதிபர் கிம் ஜாங் உன்னின் மேற்பார்வையில் நேற்று புதிய ஆயுதங்களை சோதனை மேற்கொண்டதாக வடகொரியா அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.
'எந்த அந்நியச் சக்திகளும் எங்களை சீண்டாத வகையில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதே எங்களின் நிலைப்பாடாக உள்ளது' என கிம் ஜாங் உன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் கொரிய தீபகற்பத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.