இந்திய, சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது. இதனிடையே, எல்லை பகுதியான லேவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அவரின் பயண திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி அங்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.
பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கில் எந்த வித நடவடிக்கையும் யாரும் எடுக்கக்கூடாது என சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாவோ லிஜியன் கூறுகையில், "இரு தரப்பும் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் ராணுவ, ராஜாங்க ரீதியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறது" என்றார்.
முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி நரவணே ஆகியோரும் பிரதமருடன் சென்றுள்ளனர். லே பகுதியில் உள்ள நிமு என்ற பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள், விமானப் படையினர், ஐ.டி.பி.பி (I.T.B.P.) வீரர்கள் உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். மேலும், கல்வான் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் காயமடைந்த இந்திய வீரர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது எல்லையின் நிலவரங்கள் குறித்து ராணுவ வீரர்கள் பிரதமரிடம் விளக்கமளித்தாகக் கூறப்படுகிறது.
போர் பதற்றம் நிலவிவரும் சூழலில் கிழக்கு லடாக் பகுதியில் 20,000 ராணுவ வீரர்களையும் வடக்கு சிஞ்சியாங் பகுதியில் 10,000 ராணுவ வீரர்களையும் சீனா குவித்துள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: லடாக் எல்லைப் பகுதிக்கு பிரதமர் மோடி திடீர் பயணம்