வடகொரியாவின் உள்ளூர் வலைதளத்தில் தென்கொரியா தொடர்பான அதிகாரப்பூர்வற்ற தகவல் ஒன்று பரவி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலுக்கு அணு எரிபொருளை வாங்க அமெரிக்காவை தென் கொரியா அணுகியுள்ளது என்றும்; இதற்கான பேச்சுவார்த்தைக்காக தென்கொரியாவின் துணைத்தேசியப்பாதுகாப்பு ஆலோசகரான கிம் ஹியூன்-சோங்கி வாஷிங்டன் சென்றிருந்தார் எனவும் குறிப்பிட்டிருந்தனர். இச்செயல் மிகவும் ஆபத்தானது என்றும்; எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்த மாதத்தொடக்கத்தில், தென்கொரிய செய்தித்தாள் நிறுவனம் ஒன்று இத்தகைய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், அணுசக்தி எரிபொருள் வாங்க தென்கொரியா அமெரிக்காவிடம் விருப்பம் காட்டியது. ஆனால், சில கொள்கைகளை சுட்டிக்காட்டி தென்கொரியாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாகத் தெரிவித்திருந்தனர்.
ஆனால், இந்தத் தகவலை தென்கொரிய அதிபர் அலுவலகம் உறுதிபடுத்தவில்லை. கிம் வாஷிங்டனுக்குப் பயணம் செய்தது இருதரப்பு மற்றும் புவிசார் அரசியல் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காகத் தான் எனத் தகவல் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, பியோங்யாங்கில் வட கொரியாவின் ஆளும் கட்சி நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டைக் கொண்டாடும் ராணுவ அணிவகுப்பின் போது, பலவிதமான ஆயுத அமைப்புகள் முதல் முறையாக வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு காட்டப்பட்டன. வடகொரியாவின் ஆயுதங்களால் கவலை கொண்டிருப்பதாகவும், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் எனவும் தென் கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.