உலகைச் சூறையாடி வரும் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவிட்-19 நோயை முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய ஆன்டிபாடிகளை தாங்கள் கண்டறிந்துள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வுக்காக, பீஜிங் யூவான் மருத்துவமனையோடு இணைந்து பணியாற்றிய ஆய்வாளர்கள் குணமடைந்த 80 கோவிட்-19 நோயாளிகளின் உடம்பிலிருந்து ரத்த மாதிரிகளை சேகரித்து, அதிலுள்ள ஆன்டிபாடிகளைப் பிரித்து எடுத்து விலங்குகள் மீது செலுத்தி பரிசோதித்துள்ளனர்.
இந்தப் பரிசோதனையில் தான், கரோனா வைரஸை முற்றிலுமாக அழிக்கக்கூடிய 14 ஆன்டிபாடிகளை கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து இந்த ஆய்வின் தலைவர் சூனே ஜி கூறுகையில், "ஆன்டிபாடிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகள், எய்ட்ஸ், எபோலா, மெர்ஸ் போன்ற நோய்களை வெற்றிகரமாகக் குணப்படுத்த உதவியுள்ளன" என்றார்.
வரும் பனிக்காலத்துக்குள் இந்தத் தடுப்பு மருந்து தயாராக வாய்ப்புள்ளது என அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி!