நேபாளம் நாட்டில் உள்ள ருய் கிராமத்தில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பல்ராம் பனியா (வயது 50) என்ற நேபாளப் பத்திரிகையாளர் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தார். இச்செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், காத்மாண்டு பகுதியில் அமைந்துள்ள பாகமதி ஆற்றங்கரை அருகே இறந்த நிலையில் அப்பத்திரிகையாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பத்திரிகையாளரின் உடலை கைப்பற்றிய பிம்ஃபேடி காவல் துறையினர் ஹேட்டவுடா மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்துள்ளனர். பல்ராமின் செல்போன் நெட்வொர்க் சிக்னல் மூலம் அவர் கடைசியாக, பல்கு ஆற்றங்கரை அருகே நடமாடியது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர், அவரின் செல்போன் ஸ்விச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அவரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பல்ராமை கண்டுபிடிக்க காவலர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதுகுறித்து காவலர் ஒருவர் கூறுகையில், "மாயமான பத்திரிகையாளரைக் கண்டுபிடிக்க புகார் அளிக்கப்பட்டது. புகார் கடிதத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தை வைத்துப் பார்க்கையில் பாகமதி ஆற்றங்கரையில் இறந்து கிடந்தது பத்திரிகையாளர் பல்ராம் என்பது தெரிய வந்துள்ளது" என்றார்.
நேபாள நாட்டின் கந்திப்பூர் செய்தி நிறுவனத்தில் அரசியல் செய்தியாளராக பல்ராம் பணியாற்றி வந்துள்ளார். இவர், அரசு நிர்வாகம், உயர் மட்ட அலுவலர்கள் குறித்து செய்திகள் வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மத்திய அரசின் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை குறித்த வழக்கு - உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு!