உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, நேபாள அரசு புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற பயணம் செய்வதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 13ஆம் தேதி நிறுத்திவைத்திருந்தது. இந்நிலையில், சுமார் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த எவரெஸ்ட் சிகரம் மலையேற்ற பயணம் மீண்டும் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நேபாள சுற்றுலாத் துறையின் இயக்குநர் மீரா ஆச்சார்யா கூறுகையில், "மலைகள் இப்போது மலையேறுபவர்களுக்காக திறந்து விடுப்படுகின்றன. முதற்கட்டமாக, 414 சிகரங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்வுக்கு ஏற்ப, ஹோட்டல், உணவகங்கள், மலையேற்றம், மலையேறுதல் சேவைகள் வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்க அரசாங்கம் அனுமதித்துள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தின் பயணத்திற்கு குறைந்தபட்சம் 5,500 டாலர் வசூலிக்கப்படுகிறது. விரைவில் சர்வதேச விமானங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்