வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்லா, இரு நாள் அரசு முறை பயணமாக நேபாளத்திற்கு சென்றுள்ளார். அங்கு அமைந்துள்ள தூதரகம் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான ஆசிய நிறுவனத்தில் பேசிய அவர், நேபாளம் போன்ற அண்டை நாடுகள் வளர்ச்சி அடையாத வரை இந்தியாவின் வளர்ச்சி என்பது முழுமையற்றதாகவே இருக்கும் என தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "இந்திய, நேபாளம் நாடுகளுக்கிடையேயான உறவு சிக்கலானது. பல்வேறு விழுமியங்களின் அடிப்படையில் அது அமைந்துள்ளது. ஒரே மாதிரியான புவிசார், நாகரிக பாரம்பரியம், கலாசாரம், வழக்கங்களை கொண்டுள்ளோம். இரு நாட்டு மக்களுக்கிடையேயான உறவு வலிமையாக உள்ளது. அரசு அதனை வரவேற்க வேண்டும்" என்றார்.
முன்னதாக, நேற்று, நேபாளத்தின் அதிபர் பித்யா தேவி பண்டாரி, பிரதமர் கே.பி. சர்மா ஒலி, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதிப் குமார் கியாவாலி, வெளியுறவுத்துறை செயளாளர் பாரத் ராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்தியாவுக்கு வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க அவர் அழைப்பு விடுத்தார்.
பொருளாதார ரீதியிலான உறவு, இணைப்பு திட்டங்கள் மற்றும் மக்கள் இடையேயான உறவு ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து நேபாள தலைவர்களுடன் ஸ்ரீங்லா ஆலோசனை நடத்தினார். இந்திய சந்தையை பயன்படுத்தி பொருளாதார ரீதியாக மேம்படுத்திக் கொள்ளவும் அவர் ஆலோசனை வழங்கினார். கரோனாவுக்கு எதிரான போரில் உதவும் வகையில் 2,000 ரெம்டெசிவிர் தடுப்பூசிகளை நேபாளத்திற்கு வழங்கினார்.