அர்மேனியா-அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியிலிருந்து போர் நடைபெற்று வருகிறது. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பகுதிகளான இந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதி தொடர்பாக 1994ஆம் ஆண்டு முதல் கடுமையான மோதல் போக்கு நிலவிவருகிறது.
சர்ச்சைக்குரிய பிராந்தியமான நகோர்னோ-காாராபக் பகுதியில் இரு நாடுகளும் கடுமையாக சண்டையிட்டு வந்தன. இந்த மோதலில் அசர்பைஜான் நாட்டிற்கு அண்டை நாடான துருக்கி ஆதரவுக் கரத்தை நீட்டி ராணுவ உதவிகளையும் மேற்கொண்டது.
முன்னதாக ரஷ்யா இந்த விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி, போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தியது. இதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தபோதிலும் தொடர்ந்து அவை தாக்குதல் நடத்தி வந்தன.
இந்நிலையில், அமெரிக்கா தலையிட்டு இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களுடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. தீவிர ஆலோசனைக்குப் பின்னர் தற்போது அமைதி ஒப்பந்தத்திற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இதையடுத்து நகோர்னோ-காாராபக் பகுதியில் இரு நாடுகளும் இன்று (அக்.26) முதல் போர் நிறுத்தம் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
அர்மேனியா மற்றும் அசர்பைஜான் நாடுகள் சோவியத் யூனியனின் அங்கங்களாக இருந்துள்ளன. சோவியத் ரஷ்யா உடைந்த பின்னர் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக உள்ள அர்மேனியா ஒரு நாடாகவும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள அசர்பைஜான் மற்றொரு நாடாகவும் உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அமெரிக்காவிற்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல்' - பிடன்!