மியான்மரில் ராணுவ ஆட்சி பிப்ரவரி 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்டோரை ராணுவம் சிறையில் வைத்துள்ளது. ராணுவ ஆட்சிக்கு எதிராகப் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கிச் சூடு உள்பட பல அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது. இதுகுறித்து அரசியல் கைதிகளின் உதவி சங்கம் (Assistance Association of Political Prisoners) வெளியிட்ட அறிக்கையின்படி, "மே 30 ஆம் தேதி வரை, சுமார் 840 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதே போல, 4,409 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சியில், அத்தியாவசிய தேவைக்கான பொருட்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. பொது மக்களிடம் பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், வங்கியில் வருங்கால சேமிப்பாக வைத்திருந்தப் பணத்தை எடுத்துச் செலவழித்து வருகின்றனர். பலர் பணம் இல்லாததால், உணவு சாப்பிடுவதைக் குறைத்துக் கொண்டனர். இதே நிலை நீடித்தால், இன்னும் சில மாதங்களில் பெரும்பாலான மக்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும் என்று சர்வதேச உணவு அமைப்பு எச்சரித்துள்ளது. சுமார் 34 லட்சம் மக்கள் உணவு உண்ணப்படாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.