புல்வாமா தாக்குதல், நாடாளுமன்ற வளாக தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு தொடர்பிருப்பது உறுதியானதையடுத்து அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு இந்தியா ஐநாவிடம் தொடர்ந்து வலியுறுத்திவந்தது.
இங்கிலாந்து, அமெரிக்கா, ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஆதரவளித்த நிலையில் சீனா மட்டும் மறுப்பு தெரிவித்துவந்தது.
இவ்விவகாரம் குறித்து இந்தியா-சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து, சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இதன்படி ஐ.நா. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது.
இந்நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் அரசு சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் மீது ஐநா தீர்மானத்தை முழுவதுமாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதன்படி மசூத் அசார் சொத்துகள் முடக்க நடவடிக்கை எடுக்கவும், பயணத்தடையை அமல்படுத்தவும், அவர் ஆயுதங்கள், வெடிமருந்து வாங்கவும், விற்கவும் தடைவிதிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.