பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஃஷெரிப், அல்-அஜிஜியா ஸ்டீல் மில்ஸ் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.
இந்நிலையில், தந்தை நிரபராதி என்று நிரூபிப்பதற்காக அவரது மகள் மரியம் நவாஸ், அஜிஜியா ஊழல் வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி ஒருங்கிணைத்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மரியம் வெளியிட்ட வீடியோவில், அஜிஜியா ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அர்ஷத் மாலிக், சிறையில் தண்டை அனுபவித்துவரும் முன்னாள் பிரதமருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று ஒப்புக்கொள்வது போலக் காட்சிகள் அமைந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மரியம் நவாஸ், நீதிபதியை மிரட்டி இந்தத் தீர்ப்பை வழங்க வலியுறுத்தியுள்ளனர் என்றும், வழக்கு விசாரணையின் போது நீதிபதி அர்ஷத் மாலிக் கடும் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டதாவும் குற்றம்சாட்டினார். மேலும், இதனால் அவர் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் மரியம் கூறினார்.
"அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து சிறையில் வாடும் என் தந்தைக்கு இந்த வீடியோ வரப்பிரசாதமாக அமைந்துள்ளது"என மகிழ்ச்சி தெரிவித்துள்ள மரியம், இந்த ஆதாரத்தை ஆய்வு செய்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தன் தந்தையை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை மரியம் ட்விட்ரிலும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.