கோலாலம்பூர்: ரோனா வைரஸ் தொற்று நோயை சரியாகக் கையாளாதது, பொருளாதாரத்தை மீட்டெடுக்க சரியான நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை மலேசிய அரசு மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.
மேலும், பிரதமர் முகைதின் யாசின் தனது பெரும்பான்மையை மக்களவையில் நிரூபிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தன. தொடர்ந்து முகைதின் யாசினுக்கு ஆதரவளித்து வந்த கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 15 எம்பிக்கள் தங்களது ஆதரவை திரும்பப்பெற்றதன் மூலம், அவருக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனது.
பிரதமர் ராஜினாமா
எதிர்க்கட்சிகள், ஆளும் அரசுக்கு பெரும்பான்மை இல்லை எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், அதனை ஏற்காத பிரதமர் முகைதின் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவே கூறிவந்தார். மேலும், அடுத்த மாதம் மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாகவும் தெரிவித்து வந்தார்.
இதற்கிடையில், அவருக்கு ஆதரவளித்து வந்த 15 எம்பிக்கள் தங்களது ஆதரவை திரும்பப் பெறுவதாக மன்னருக்கு கடிதம் அனுப்பினர். இந்தக் கடிதத்தை மன்னரும் ஏற்றுக் கொண்டதாக எம்பிக்கள் தெரிவித்த நிலையில், வேறு வழியில்லாமல் நேற்று (ஆக.16) தனது பதவியை முகைதின் ராஜினாமா செய்தார்.
அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட மலேசியா மன்னர், புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரையில், முகைதின் இடைக்காலப் பிரதமராக இருப்பார் எனத் தெரிவித்தார்.
கரோனாவை சரியாக கையாளாது, நிதி நிலையை சரியா நிர்வாகிக்காதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பிரதமர் முகைதின் யாசின் மீது வைக்கப்பட்டது.
எம்பிக்களுக்கு கடிதம்
இந்நிலையில், புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க மன்னர் அப்துல்லா, அரசியல் கட்சித் தலைவர்களை இன்று சந்திக்கிறார். மேலும், நாடாளுமன்றத்தின் சபாநாயகர், எம்பிக்களுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதில், யாருக்கு அனைவரும் ஆதரவளிக்கிறார்கள் என்பதை இன்று மாலைக்குள் தன்னிடம் தெரியப்படுத்தவேண்டும் என மன்னர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
எம்பிக்கள் அனைவரும் தங்கள் ஆதரவு குறித்த கடிதத்தை மன்னருக்கு அனுப்பிய பின்னர், யார் பிரதமர் என்பது தெரியவரும்.
மன்னரின் பங்கு
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை யாருக்கு இருப்பதாக மன்னர் நம்புகிறாரோ அவரை பிரதமராக தேர்வு செய்வார். 2018ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற மகாதீர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்ய, முகைதினை மன்னர் அப்துல்லா பிரதமராகத் தேர்வு செய்தார்.
முகைதின் தேர்வு செய்யப்ப்பட்டது, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிமின் தரப்பால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. இந்த முறை பிரதமரை தேர்வு செய்வதில் மன்னருக்கு கடும் சிக்கல் இருக்கும். ஏனென்றால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை.
பிரதமர் பதவி வரிசையில் இருக்கும், அன்வர் இப்ராகிமுக்கு 90 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்றால், 111 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும்.
இதையும் படிங்க: கானியைவிட தாலிபன்கள் ஆட்சி சிறப்பு - ரஷ்யா