இலங்கை சிறைகளில் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள்வரை தண்டனை அனுபவித்த கைதிகளை விடுவிக்க வேண்டும் என எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அடங்கிய குழு ராஜபக்சவை சந்தித்து இக்கோரிக்கையை விடுத்துள்ளது.
இதுகுறித்து அதிபர் கோத்தபய ராஜபக்சவிடம் ஆலோசித்துவிட்டு முடிவு எடுக்க உள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுமந்திரன் கூறுகையில், "இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதமரை சந்தித்துள்ளோம். வட கிழக்கு பிராந்தியத்தின் உறுப்பினர்கள் பகுதி வாரியாக பிரச்னைகளை எடுத்துரைத்தனர்.
பத்து முதல் பதினைந்து ஆண்டுகள்வரை தண்டனை அனுபவித்த கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்" என்றார். கரோனா குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்ற ஐக்கிய தேசிய கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சி அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 25ஆம் நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை 755 பேர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இதையும் படிங்க: சிரிய ராணுவக் கிடங்குகள் மீது தாக்குதல் : இஸ்ரேல் மறுப்பு