இஸ்லாமாபாத்: பல ஆண்டுகால போருக்கு பின்னர் தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தானின் அரசியல் தலைமைக்கு இடையிலான அமைதிக்கான சிறந்த வாய்ப்பை தரக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தைகள் கத்தாரில் சனிக்கிழமையன்று தொடங்கியது.
கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால மோதலுக்கு இராணுவ ரீதியான ஒரு தீர்வு காண்பதற்காக, தலிபானுடனான சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான பிப்ரவரி 29க்கு பிந்தைய இரண்டு வாரங்களுக்குள் இந்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. அந்த ஒப்பந்தம், ஆப்கானியர்களுக்கு இடையிலான நேரடி பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நம்பிக்கையின் அடையாளமாக கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது
கடந்த செப்டம்பரில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தல் காரணமாக அரசியல் நெருக்கடியில் இருந்த ஆப்கானிய அரசாங்கம் 5,000 தலிபான்களை விடுவிக்குமாறு கூறப்பட்டதற்கு முதலில் தயங்கியது, ஆனால் இறுதியில் மனம் மாறியது.
ஆப்கானிஸ்தானில் போரிடும் தரப்பினரிடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளை "சமாதானத்திற்கான ஒரு சிறந்த வாய்ப்பு ... அனைத்து ஆப்கானியர்களுக்கும் பயனளிப்பது மட்டுமன்றி பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் உலகளாவிய பாதுகாப்பிற்கும் பங்களிக்கும் " என்று சமாதான உடன்படிக்கைக்கு ஒன்றரை வருடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்காவின் அமைதிக்கான தூதர் ஸல்மே கலீல்சாத் கூறினார்.
ஆனால் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது, இருதரப்பினருக்கு இடையிலான அவநம்பிக்கை காரணமாக முன்னேற்றம் என்பது நிச்சயமற்ற தன்மையால் நிறைந்துள்ளது
பேச்சுவார்த்தையில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்படும்.
நிரந்தர போர்நிறுத்தம்
செயல் திட்டத்தில் உள்ள முக்கிய விஷயங்களில் ஒன்று முழுமையான மற்றும் நிரந்தர போர்நிறுத்தமாகும்.
அரசாங்கம் தனது கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்து வருகிறது, பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது இது செயல் திட்டத்தில் உள்ள முக்கிய விஷயங்களில் ஒன்றாக இருக்கும் என்று தலிபான்கள் பலமுறை கூறியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஆயுதமேந்திய தலிபான் போராளிகள் மற்றும் அரசாங்கத்துக்கு விசுவாசமாக இருக்கும் இராணுவவீரர்களுக்கு என்ன செய்வது என்பது பெரிய தடையாக இருக்கும்.
பெண்கள் உரிமைகள்
உரிமைகளைப் பாதுகாப்பது, குறிப்பாக பெண்கள் உரிமை என்பது செயல் திட்டத்தில் முக்கியமாக இருக்கும். அரசாங்கம் உட்பட ஆப்கானிஸ்தான் தீவிரமான பழமைவாதிகள் 19 ஆண்டுகளில் பெண்கள் உரிமை மசோதாவை நிறைவேற்ற மறுத்துவிட்டனர். சர்வதேச சமூகத்தின் பார்வை பெண்களுக்கு முன்னேற்றம் காண மிகப்பெரிய உந்துதலாக இருக்கும்.
தலிபான்கள் ஏற்கனவே பள்ளியில் படிக்கும் சிறுமிகள் மற்றும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், அரசியலில் பெண்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் போன்றவற்றிற்கு சம்மதம் கூறியுள்ளனர். இருப்பினும், அவர்கள் ஒரு பெண் அதிபர் அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போன்றவற்றிற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று கூறுகிறார்கள். காபூலில் ஏராளமான அரசியல் தலைவர்களை, ஆண்கள் மற்றும் ஒரு சில பெண்கள் உட்பட, அசோசியேட்டட் பிரஸ் ஆய்வு செய்ததில் அவர்கள் இது வாழ்வதற்கான ஒரு சமரசம் என்று கூறியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் சிமா சமர் உட்பட அனைவருமே இதனை ஒப்புக்கொள்கின்றனர் என்று கூற முடியாது.
அரசியலமைப்பு மாற்றங்கள்
அரசியலமைப்பு மாற்றங்களும் செயல் திட்டத்தில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இஸ்லாமிய விதிகளுக்கு தலிபான்களின் தலையீடு இருக்கும் என்று பல ஆப்கானியர்கள் நினைக்கின்றனர். மற்ற உள்நாட்டு பிரச்சினைகள் என்று பார்த்தால் நாட்டின் பெயரை இஸ்லாமிய குடியரசு அல்லது இஸ்லாமிய அமீரகம் என்று மாற்றுவார்களா என்பதுதான்.
பேச்சுவார்த்தையின் போது
தலிபான் தரப்பில், 20 உறுப்பினர்களைக் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு என்பது இயக்கத்தின் தலைமைக் குழுவில் இருந்து 13 உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு உறுதியான குழுவாகும். இது தலிபான் தலைமை நீதிபதி அப்துல் ஹக்கீம் தலைமையில் கடந்த வார இறுதியில் நியமிக்கப்பட்ட குழுவாகும். இப்போது தலிபான் அணியின் துணைத் தலைவராக இருக்கும் ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஸாய்-க்கு பதிலாக அப்துல் ஹக்கீம் நியமிக்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.
தலிபான் தலைவர் மவுல்வி ஹிபத்துல்லா அகுன்சாதா ஆகஸ்ட் முழுவதும் பேச்சுவார்த்தைக் குழுவை மாற்றியமைத்துக் கொண்டிருந்தார். ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தானுடன் நெருக்கமாக கருதப்படும் ஒரு முக்கிய பிரதிநிதியான மவுல்வி அமீர் கான் முத்தாக்கியை நீக்கி, தலைமைக் குழுவில் மேலும் நான்கு பேரைச் சேர்த்தார். அணியின் வலிமை என்பது அந்த இடத்திலேயே முடிவுகளை எடுப்பது தான்.
அமெரிக்காவுடனான சமாதான உடன்படிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்தியவரும் இயக்கத்தின் இணை நிறுவனருமான முல்லா அப்துல் கானி பரதார், கத்தார் தலைநகரான தோஹாவில் அமைப்பின் சக்திவாய்ந்த தலைவராக தலைமை தாங்குகிறார்.
ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழு தலைவரான முகமது மாமூன் ஸ்டானிக்ஸாய்-க்கு தலிபான் தலைமை பிரதிநிதியுடன் எந்த தொடர்பும் இல்லை. ஆப்கானிய உளவுத்துறையின் முன்னாள் தலைவரான இவர், பொதுமக்கள் மரணத்திற்கு பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வு பிரிவு காரணமானதால், ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில் கானி வென்றதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து, பின்னர் அதிபர் அஷ்ரப் கானியுடன் ஏற்பட்ட அரசியல் சமரசத்தில் பதவி வழங்கப்பட்ட அப்துல்லா அப்துல்லா தலைமையிலான தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் கவுன்சிலுக்கு முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு உடன்படிக்கையையும் எட்டுவதற்கு முன்னர் அப்துல்லா சட்ட, மத மற்றும் அரசியலமைப்பு பிரச்சினைகள் குறித்து நிபுணர்களின் கருத்துக்களைத் கேட்டறிவார்.
முன்னே இருக்கும் கவலைகள்
அதிருப்தி அடைந்த முன்னாள் தலிபான் போராளிகள், மற்ற போராளி குழுக்களில், குறிப்பாக நாட்டின் இஸ்லாமிய அரசு குழுவில் சேரக்கூடும் என்ற அச்சத்தை ஆப்கானிய அரசியல் நோக்கர்களும் ஆய்வாளர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.
தலிபான் போராளிகள், வளர்ந்து வரும் இஸ்லாமிய அரசு குழுவுடன் போராடி வருகின்றனர். ஆனால் தலிபான்கள் ஏற்கனவே தீவிரவாத சன்னி முஸ்லீம் குழுவிடம் போராளிகளை இழந்துள்ளனர். பல தலிபான் போராளிகள் தங்கள் தலைவர்கள் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதைக் கண்டு ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும் நாட்டின் கிட்டத்தட்ட 50% ஏற்கனவே அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவர்கள் இராணுவ ரீதியாக வெல்ல முடியும் என்று நம்புகிறார்கள்.
வீடுகளுக்குத் திரும்பும் தலிபான் போராளிகள், ஊழல் அதிகாரிகளால் குறிவைக்கப்படலாம் அல்லது அதிகாரிகளால் அச்சுறுத்தப்படலாம் என்று வாஷிங்டனின் கண்காணிப்புக் குழு, ஆப்கானிஸ்தான் புனரமைப்புக்கான சிறப்பு ஆய்வாளர் ஜெனரல் கவலை தெரிவித்துள்ளார். அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டணியால் தங்கள் அரசாங்கம் வெளியேற்றப்பட்ட பின்னர் 2001ல் முன்னாள் போராளிகள் வீட்டிற்குச் திரும்பி சென்றபோது இவ்வாறு நடந்தது. அந்த நேரத்தில் போராளிகள் மலைகளுக்குச் சென்ற போது, தலிபான்களை பெருமளவில் அழித்திருந்தனர். திரும்பி வரும் போராளிகளுக்கு எதிரான தாக்குதல்களும் இனப் பிளவுகளை அதிகப்படுத்தின. பெரும்பாலான பஷ்டூன் இனத்தை சேர்ந்த தலிபான்கள் தாங்கள் ஓரங்கட்டப்பட்டதாக உணர்கிறார்கள்.
இந்தியா எதை விரும்புகிறது?
ஆப்கானை ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் ஆப்கானில் நீண்டகால அமைதியை நிலைநாட்ட உடனடி போர்நிறுத்தத்தின் அவசியத்தை ஆதரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்தார்.
தோஹாவில் ஆப்கானிய சமாதான பேச்சுவார்த்தைகள் குறித்த மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றிய ஜெய்சங்கர், சமாதான நடவடிக்கைகள் ஆப்கான் தலைமையிலானதாக இருக்க வேண்டும் என்றும் சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் நலன்களை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.
ஆப்கானிஸ்தானை ஒருபோதும் இந்தியா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என்று அவர் கூறினார்.
“தோஹாவில் இன்று நடந்த ஆப்கானிய சமாதான பேச்சுவார்த்தைகள் குறித்த மாநாட்டில் உரையாற்றினேன். சமாதான முன்னெடுப்புகள் ஆப்கான் தலைமையிலான, ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான மற்றும் ஆப்கானிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், ஆப்கானிஸ்தானின் தேசிய இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதித்து மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை ஊக்குவித்து, சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் நலனை உறுதிசெய்து நாடு முழுவதும் வன்முறையை திறம்பட நிவர்த்தி செய்யுங்கள் என்றும் தெரிவித்தேன்” என்று வெளியுறவு அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்தார்
ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கான முக்கிய கூட்டாளியாக இந்தியா இருந்து வருவதை வலியுறுத்திய அவர், சமீபத்திய ஆண்டுகளில் போரினால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டிற்கு ஒரு மில்லியன் டன்களுக்கும் அதிகமான உணவு தானியங்களை இந்தியா வழங்கியுள்ளது என்றார்.
ஆப்கானிய மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கு இந்தியா வசதி செய்துள்ளது என்று ஜெய்சங்கர் கூறினார். "ஆப்கானிய தேசத்தின் நலன், செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்த எங்கள் ஆழ்ந்த நிலைப்பாட்டின் உதாரணங்கள் இவை" என்று மேலும் அவர் கூறினார்
ஆப்கானிஸ்தானுடனான நமது மக்களின் நட்பு, நமது வரலாற்றுக்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார். இந்தியாவின் 400-க்கும் மேற்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களில் ஆப்கானிஸ்தானின் பங்கு விடுபடவில்லை என்று மேலும் கூறினார்.
ஆப்கானிஸ்தானுடனான இந்தியாவின் நட்பு "வலுவானது, அசைக்க முடியாதது" என்று வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
நாங்கள் எப்போதும் நல்ல அண்டை நாடாக இருந்தோம், இனியும் இருப்போம் என்று அவர் மேலும் கூறினார்.
பாகிஸ்தானின் குரேஷி கூறுவது என்ன?
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிய சமாதான பேச்சுவார்த்தை கத்தாரில் தொடங்கிய போது, ஆப்கானிஸ்தான் தலைவர்கள் தங்கள் நாட்டில் பல ஆண்டுகளாக நடந்து வரும் மோதலுக்கு, பரந்த அடிப்படையிலான மற்றும் விரிவான அரசியல் தீர்வுக்கு ஆக்கபூர்வமாக ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் சனிக்கிழமையன்று கூறியது.
கத்தார் நாட்டில் நடந்த ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி காணொளி இணைப்பு மூலம் உரையாற்றினார் என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைவர்கள் ஆக்கபூர்வமாக ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் அனைத்தையும் உள்ளடக்கிய, பரந்த அடிப்படையிலான மற்றும் விரிவான அரசியல் தீர்வைப் எட்ட வேண்டும் என்றார்.
"அனைத்து தரப்பினரும் அவரவர் பொறுப்புகளுக்கு மதிப்பளிப்பார்கள், அனைத்து சவால்களையும் பின்னடைவுகளையும் எதிர்கொள்வதில் விடாமுயற்சியுடன் இருப்பார்கள், மேலும் ஒரு நேர்மறையான முடிவை அடைவதற்கு மாறாமல், உறுதியுடன் இருப்பார்கள்" என்று அவர் கூறினார்.
வன்முறையைக் குறைப்பதை ஊக்குவிப்பதன் மூலமும், உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைகளை வலியுறுத்துவதன் மூலமும் ஆப்கானிஸ்தானுடன் சாத்தியமான எல்லா வழிகளிலும் பாகிஸ்தான் உடனிருந்ததாக குரேஷி கூறினார்.
"பிப்ரவரி 29, 2020 அன்று தோஹாவில் நடந்த அமெரிக்க-தலிபான் அமைதி ஒப்பந்தத்தில் எட்டப்பட்ட இந்த செயல்முறையை பாகிஸ்தான் முழுமையாக எளிதாக்கி, இந்த நிலையை உருவாக்கியுள்ளது" என்று கூறிய அவர் பேச்சுவார்த்தைகளின் தொடக்கம் என்பது ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாகும் என்றும் கூறினார்.
தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தைகள் ஆப்கானியர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி தீர்மானிப்பதாக இருக்க வேண்டும். வெளிநபர்கள் தலையீடு அல்லது குறுக்கீடு இல்லாமல் ஆப்கானியர்கள் மட்டுமே அவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை' - முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி