வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற கிங்பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா, கடனை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச்சென்றார். அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நீண்ட நாட்களாக முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், மல்லையாவை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவுக்கு இங்கிலாந்து உள் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.8), தனது 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அரசு முடக்கியுள்ளதாக விஜய் மல்லையா குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமரின் பேச்சுக்கு தன் சுட்டுரை (டிவிட்டர்) பக்கத்தில் மல்லையா காட்டமான முறையில் கருத்தை பதிவிட்டிருக்கிறார்.
அதில், "பிரதமர் நரேந்திர மோடியின் கடைசி நாடாளுமன்ற பேச்சு குறித்து சில தகவல்கள் நான் அறிந்தேன். முதலில் மோடி ஒரு தனித்துவ பேச்சாளர் என்பதை நினைவில் கொள்கிறேன். அவர் நாடாளுமன்ற கூட்டத்தில், 'யாரோ ஒரு நபர் 9,000 கோடி ரூபாயை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு ஓடி விட்டார்' என்று கூறியிருக்கிறார். இவை என்னை குறிவைத்து தொடுக்கப்பட்ட வார்த்தைகள் என்பதை என்னால் உணர முடிகிறது" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மற்றுமொரு பதிவில் மல்லையா, “என் பழைய பதிவின் தொடர்ச்சியாக இதை பதிவிடுகிறேன். என் மேசையில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை கவர்ந்து செல்ல, பாரத பிரதமர் ஏன் வங்கிகளுக்கு ஆணையிடவில்லை. அப்படி செய்தால் கிங்ஃபிஷரின் பொது நிதியை முழுமையாக மீட்டெடுத்ததற்கான குறைந்தபட்ச உரிமையாவது அரசு கோரலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது மூன்றாவது பதிவில், “நான் ஏற்கனவே பணத்தை செலுத்துவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தேன். இது எந்த வகையிலும் அற்பத்தனமானது என்று நிராகரிக்க முடியாது. இது முற்றிலும் உறுதியான, நேர்மையான, உடனடியாக நிகழக்கூடிய வாய்ப்பாகும். இந்த சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. கிங்ஃபிஷர் சொத்துகளை அரசு கையகப்படுத்தியும், அதனை விற்காமல் ஏன் என்னை கடனாளி என்று சொல்லிவருகிறது? இது வேடிக்கையாக இருக்கிறது" என அவர் குற்றம்சாட்டினார்.