கோவிட்-19 அச்சம் காரணமாக பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ள ஒரு துறையாக ஹோட்டல் துறை உள்ளது. உணவு நமது மேசைக்கு வருவதற்கு முன், அதைப் பலரும் கையாள வேண்டிய சூழல் இருப்பதாலும், உணவை ஒரே இடத்தில் பலர் அமர்ந்து உட்கொள்ள வேண்டும் என்பதாலும் உணவகங்களுக்குச் செல்ல மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், முதல்முறையாக மனித தொடர்பு இல்லாத உணவு டெலிவரி முறை ரஷ்யாவிலுள்ள ஒரு கே.எஃப்.சி. கடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ரோபோ, கன்வேயர் பெல்ட்டிலிருந்து உணவை எடுத்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்.
வாடிக்கையாளர் உணவை ஆர்டர் செய்யும்போதே அவர்களின் முக அடையாளம் குறித்த தகவல்கள் சேமிக்கப்படும். பின் அந்தத் தகவல்களைக் கொண்டு உணவை ஆர்டர் செய்த நபர்களுக்கு சரியான உணவு விரைவாக வழங்கப்படும்.
இது குறித்து கே.எஃப்.சி. நிறுவனத்தின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான இயக்குநர் டிமிட்ரி ஆகேவ் கூறுகையில், "இது ஒரு நவீனமயமான உணவகம். டிஜிட்டல்மயமான எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய்ந்து அதற்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்திவருகிறோம். உணவகங்களுக்கு வருபவர்கள் தங்களுக்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் உணவு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் தேவையை இது பூர்த்தி செய்யும்" என்றார்.
இதில் உணவை ஆர்டர் செய்யவும் தானியங்கி கியோஸ்க் இயந்திரமே பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் உணவை மனிதர்கள் கையாளுவது என்பது கணிசமாக குறைக்கப்படுகிறது. இருப்பினும், உணவை மனிதர்களே தயார் செய்வார்கள் என்று டிமிட்ரி ஆகேவ் தெரிவித்துள்ளார்.
கரோனா காலத்தில் இதுபோன்ற தொழில்நுட்பங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளபோதும், இது வரும் காலங்களில் பலரது வேலையைப் பறிக்கும் என்று விமர்சனமும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவைத் தொடர்ந்து ஜப்பானுடன் போதும் சீனா!