மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், கீழவை உறுப்பினர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 107 உறுப்பினர்கள் கொண்ட கீழவைக்கு கடைசியாக 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில், ஆறு கட்சிகள் களமிறங்கின.
அதில், நூரோட்டன் கட்சிக்கு 82.2 விழுக்காடு வாக்குகள் கிடைத்தது. அக்ஜோல் ஜனநாயக கட்சிக்கு 7.18 விழுக்காடு வாக்குகளும் கஜகஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7.14 விழுக்காடு வாக்குகளும் கிடைத்தன. இதன்மூலம், நூரோட்டன் கட்சியின் 84 உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அக்ஜோல் ஜனநாயக கட்சி சார்பாக ஏழு உறுப்பினர்களும் கஜகஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஏழு உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாட்டின் முக்கிய இனக்குழுக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அதிபர் ஆலோசனை குழுவிலிருந்து ஒன்பது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கீழவைக்கான பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அடுத்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி, கஜகஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு அதிபர் காசிம்-ஜோமார்ட் டோக்காயேவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கு கட்சியை கட்டமைப்பதற்கும் தயாராவதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் போதுமான நேரம் வழங்கப்பட்டுள்ளது.
சட்டப்படியும் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் தேர்தலை நடத்தும் வகையில் மத்திய ஆணையம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறது. 2019ஆம் ஆண்டுக்கு பிறகு, பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பிய நாசா வீரர்கள்... உற்சாக வரவேற்பு!