கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என பல்வேறு தலைவர்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதுதொடர்பாக அமெரிக்கா உடனான உச்சி மாநாடு இரண்டு முறை நடைபெற்றது.
இதில் 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் மாநாட்டில் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதாக கிம் உறுதியளித்தார். இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் நடைபெற்ற இரண்டாவது உச்சி மாநாட்டில் எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படாததால் தோல்வியில் முடிந்தது. இத்தகைய சூழலில், சமீபத்தில் ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதினை, கிம் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், சான்கி ஷிம்பன் எனும் நாளிதழ் ஒன்றிற்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பேட்டியளித்தார். அப்போது, பேதிய அவர், " கிம்மை நேரடியாக சந்திக்கும்வரை, ஜப்பான் வடகொரியா இடையிலான பரஸ்பர அவநம்பிக்கையை உடைக்க முடியாது. இதுதொடர்பாக கிம்முடன் வெளிப்படையாக மனம் திறந்து பேச விரும்புகிறேன். வட கொரியா மக்களுக்கு தேவையான சிறந்த திட்டங்களை மேற்கொள்ளும் வல்லமை கிம்மிற்கு உள்ளது " என தெரிவித்தார்.
எனினும், வட கொரியா தரப்பில் ஷின்சோ அபே உடனான சந்திப்புக்கு எவ்வித விருப்பமும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.