அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) இணைந்து தயாரித்த கரோனா தடுப்பூசியை வாங்கும் வகையில் ஜப்பான் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், பிப்ரவரி மாத இறுதியில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் யோஷிஹைட் சுகா தகவல் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் பலன்கள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. முடிந்தால், பிப்ரவரி மாத இறுதியில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும்" என்றார்.
ஃபைசர் நிறுவனத்திடம் 120 மில்லியன் டோஸ்களும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திடம் 120 மில்லியன் டோஸ்களும் வாங்க ஜப்பான் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதேபோல், மாடர்னா நிறுவனத்திடம் 50 தடுப்பூசி டோஸ்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியவுடன் 10,000 சுகாதார பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதம், 4 மில்லியன் மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.