ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற சாதனை படைத்த ஷின்சோ அபே, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஜப்பானில் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பை வகிக்கும் நபரேதான் நாட்டின் பிரதமராக இருப்பது வழக்கம்.
அதன்படி ஜப்பானின் ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலர் யோஷிஹைட் சுகா 377 வாக்குகளுடன் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று ஜப்பானின் புதிய பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் இன்று ஜப்பானின் புதிய பிரதமராகப் பதவியேற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷின்சோ அபே பிரதமராக இருந்தபோது அவருக்கு வலதுகரமாகச் செயல்பட்டவர்தான் இந்த யோஷிஹைட் சுகா. ஷின்சோ அபே காலத்தில் இவர் "நிழல்" பிரதமராக செயல்பட்டதாகவும் கூறப்படும். ஷின்சோ அபே உடல்நலக் குறைவு காரணமாக பதவி விலகுவதாக அறிவித்தபோதே அடுத்த பிரதமராக யோஷிஹைட் சுகாதான் பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டது.
அரசு நிகழ்ச்சிகளில் வெளிப்படையாக ஈடுபடவில்லை என்றாலும், அதிகாரத்துவத்தை நிர்வகிப்பதிலும் கொள்கைகளை முன்னெடுப்பதிலும் அவர் திரைக்குப் பின்னால் பல முக்கியப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
சுகா தனது பிடிவாதம், வலுவான அணுகுமுறைகளால் அறியப்படுகிறார். அவர் தனது அதிகாரத்தையும் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரத்தையும் பயன்படுத்தி தனது செல்வாக்கை விரிவுபடுத்தினார். எனவே அவரை நிழல் பிரதமர் என்ற அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் அழைத்தனர்.
அவரது கொள்கைகளை எதிர்த்த சில உயர் அலுவலர்கள் அரசு திட்டங்களிலிருந்து நீக்கப்பட்டனர் அல்லது வேறு பதவிகளுக்கு மாற்றப்பட்டதாகக் கூறியுள்ளனர். ஆனால், சுகாவோ பிரதமரானாலும் இதே பாணியில்தான் பணிபுரிவேன் என்று கூறியுள்ளார்.
அவர் தன்னைத் தானே ஒரு சீர்திருத்தவாதி என்று அழைத்துக்கொள்கிறார். கரோனா வைரஸ் குறையும்போது ஜப்பான் பொருளாரதாரத்தை சுற்றுலாத் துறைதான் மீட்கும் என்று கூறும் அவர், ஜப்பானில் சுற்றுலா அதிகரிக்க காரணம் தான்தான் என்றும் கூறிக்கொள்கிறார்.
இதையும் படிங்க: பில் கேட்ஸின் தந்தை உயிரிழந்தார்!