உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமிக்க நாடாக ஜப்பான் உள்ளது. அந்நாட்டின் பிரதமராக 2012ஆம் ஆண்டு முதல் ஷின்ஸா அபே பொறுப்பில் உள்ளார்.
இந்நிலையில், அவர் கடந்த சில காலமாகவே சிறுகுடல் தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) திடீரென்று பிரதமர் ஷின்ஸா அபே மருத்துவமனைக்குச் சென்றார். அன்று மாலையே அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இருப்பினும், அவரது உடல்நிலை மோசமாகவுள்ளதால் அவருக்கு ஓய்வு தேவை என்றும்; இதனால் விரைவில் அவர் பதவி விலகலாம் என்றும் இணையத்தில் தகவல் பரவின.
இந்தச் சூழலில், உடல் நலக் குறைவு காரணமாக, ஜப்பான் பிரதமர் ஷின்ஸா அபே ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு பிரதமரான 66 வயதாகும் ஷின்ஸா அபே 2,798 நாள்கள் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமராகப் பொறுப்பில் இருந்துள்ளார். இதன் மூலம் ஜப்பானில் அதிக நாள்கள் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஜப்பான் பிரதமரின் புதிய சாதனை!