ஜப்பான் நாட்டின் பிரதமராக ஷின்ஸோ அபே கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பதவியில் உள்ளார். இன்று வரையிலான கணக்கின்படி, 2,799 நாள்கள் அவர் பதவியில் இருந்துள்ளார். இதன் மூலம், அந்நாட்டில் அதிக ஆண்டுகள் ஆட்சிப் புரிந்து வரும் பிரதமர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
1964 முதல் 1972ஆம் ஆண்டு வரை சுமார் 2,798 நாள்கள் பணியாற்றியுள்ள தனது உறவினர் ஈசாகு சாடோவின் சாதனையை இதன்மூலம் அபே, தட்டிப் பறித்துள்ளார். பிரதமர் அபேயின் பதவிக் காலம் முடிவடைய இன்னும் ஒரு வருடம் இருப்பதால், யாரும் நெருங்க முடியாத வரலாற்று சாதனையை அவர் படைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
இதற்கிடையே, உடல்நல பிரச்னைகள், கரோனா தொற்றைக் கையாள்வதில் ஏற்பட்ட மன சோர்வு ஆகிய காரணங்களால், கடந்த வாரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அபே அனுமதிக்கப்பட்டார். பல மணி நேரம் நீடித்த மருத்துவப் பரிசோதனைக்கு பிறகே அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில் இன்று (ஆக. 24) மீண்டும் கியோ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அபே வந்திருந்தார். தொடர்ந்து இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த வாரம் பரிசோதனையின் விரிவான முடிவுகள் குறித்து மருத்துவமனையில் மறுபரிசீலனை செய்யவும், கூடுதல் பரிசோதனைகள் செய்யவும் வந்தேன். நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்கிறேன். தொடர்ந்து உழைக்கத் திட்டமிட்டுள்ளேன்" எனத் தெரிவித்தார்.