ஆஸ்திரேலியா அருகேயுள்ள குட்டித்தீவு நாடு நியூசிலாந்து. மொத்தமே 50 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையை கொண்டுள்ள இந்நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தொழிலாளர் கட்சியைத் தலைமை தாங்கி தேர்தலை எதிர்கொண்டார் ஜெசிந்தா ஆர்டன். அப்போது அவருக்கு வயது வெறும் 37. அரசியலில் 37 வயது என்பது மழலையர் படிப்பைப் போன்றது.
சுமார் 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் தேசிய கட்சிக்கு எதிராகக் களமிறங்கினார். அவரது அட்டகாசமான தேர்தல் வியூகம் காரணமாக, 36 விழுக்காடு வாக்குகளுடன் 46 இடங்களை வென்றார் ஜெசிந்தா ஆர்டன். அதன்பின் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியமைத்த அவர், அந்நாட்டை வழிநடத்திய விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
சவால்கள் நிறைந்த முதல் ஆட்சிக் காலம்
கடந்தாண்டு நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் பயங்கரவாதத் தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக நாடே பெரும் குழப்பத்தில் இருந்தது. மத ரீதியான மோதல்கள் நிகழ வாய்ப்புகள் அதிகம் என்றிருந்த சூழ்நிலையில், மிக சாதுர்யமாக அந்தப் பிரச்னையைக் கையாண்டு, அமைதியை நிலைநாட்டினர் ஜெசிந்தா!
அதிலிருந்து மீண்டு வருவதற்குள் எரிமலை வெடிப்பு, அதிலிருந்து மெல்ல மீண்டு வந்துகொண்டிருந்தபோது கரோனா பரவல். இப்படி அவரது முதல் ஆட்சிக் காலம் பல்வேறு சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான், கடந்த அக்டோபர் 17ஆம் தேதி நியூசிலாந்து பொதுத்தேர்தலை எதிர்கொண்டது.
2020 தேர்தல் - ஜெசிந்தாவை அங்கீகரித்த பொதுமக்கள்
வெற்றி, தோல்வி என்பவற்றைத் தாண்டி இத்தேர்தல் பொதுவாகவே மிகவும் சிறப்பானது. காரணம், தொழிலாளர் கட்சி, கன்சர்வேட்டிவ் தேசியக் கட்சி என இரு முக்கிய கட்சிகளிலும் தலைமை வகிப்பவர்கள் பெண்கள். தேர்தலில் எந்தக் கட்சி வென்றாலும் பெண் ஒருவர்தான் பிரதமர் ஆவார் என்ற ஒரு அருமையான சூழல்.
நியூசிலாந்து கடந்த சில ஆண்டுகளில் எதிர்கொண்ட பல பிரச்னைகள் காரணமாக இத்தேர்தலில் ஜெசிந்தா என்ன ஆவார் என்ற கேள்வி எழுந்திருந்தது. சோதனைகளையும் சாதனைகளாக மாற்றும் ஆளுமைத் திறனை ஜெசிந்தா பெற்றிருந்ததன் காரணமாக மக்களின் ஆதரவு ஜெசிந்தாவுக்கு அதிகரித்தது.
49 விழுக்காடு வாக்குகளுடன் 64 இடங்களில் வெற்றி பெற்றுள்ள ஜெசிந்தா, முன்பைவிட அதிக பலத்துடன் அரியணை ஏறியுள்ளார். நியூசிலாந்து வரலாற்றிலேயே தொழிலாளர் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது இதுவே முதன்முறையாகும்.
ஜெசிந்தாவின் சாதனைகள் பற்பல!
ஜெசிந்தா ஆர்டனுக்கும், கிளார்க் கேஃபோர்ட் என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நிச்சயமானது. அதற்கு முன், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவர் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பெற்றெடுத்து ஆறே வாரங்களில் பணிக்கும் திரும்பினார்.
நலமாக இருந்தாலும் நாடாளுமன்றம் பக்கம் தலைகாட்டாத தலைவர்கள் மத்தியில் குழந்தையுடனேயே நாடாளுமன்றத்திற்கு சென்ற பொறுப்பான பிரதமர் இவர்!
அமெரிக்க அதிபரின் ஒரு வார்த்தைக்குப் பயந்து, அரசின் அறிவிப்பை மாற்றும் தலைவர்கள் உள்ள உலகம் இது.
"கரோனா பரவலைத் தடுத்துவிட்டதாக நியூசிலாந்து அறிவித்தது. ஆனால், இப்போது அங்கு கரோனா பல மடங்கு அதிகரித்துள்ளது" என்று ட்ரம்ப் நியூசிலாந்தின் கரோனா பரவல் குறித்த உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்திருந்தார்.
அப்போது, வெறும் 50 லட்சம் மக்களுக்கு தலைவரான ஜெசிந்தா அமெரிக்க அதிபரை எதிர்த்து கருத்து தெரிவித்தார். "கரோனா பரவல் குறித்து கவனித்துவருபவர்களுக்கு தெரியும். நியூசிலாந்தில் ஒரு நாளில் ஒன்பது பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தினசரி ஆயிரக்கணக்கான நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்படுவதும் இதுவும் ஒன்றல்ல. அவரது (ட்ரம்ப்) கருத்து முற்றிலும் தவறானது" என்று பொட்டிலடித்தார் போல் பதிலளித்தார்.
இடம் இல்லாததால் உணவகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 'பிரதமர்' ஜெசிந்தா
பிரதமரை விடுங்கள், நம்மூரில் சாதாரண எம்பி, எம்எல்ஏ-கள் எங்காவது சென்றாலும் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்கள் செய்யும் அலப்பறைகள் சொல்லி மாளாது. ஆனால், இந்த பிரதமரையே ஒரு உணவகம் வெளியேற்றிய சுவாரசிய நிகழ்வும் நடந்திருக்கிறது.
கடந்த மே மாதம், ஜெசிந்தா ஆர்டர்ன் நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனிலுள்ள ஒரு பிரபல உணவகத்திற்கு தனது நண்பர்களுடன் காலைச் சிற்றுண்டிக்காகச் சென்றிருந்தார். கரோனாவில் இருந்து அப்போதுதான் நியூசிலாந்து மீண்டிருந்தது. இதனால் உணவகங்கள், 50 விழுக்காடு இருக்கைகளுடன் இயங்கின.
உணவகத்தில் இருந்த 50 விழுக்காடு இருக்கைகளும் நிரம்பியிருந்ததால், பிரதமரையும் அவரது நண்பர்களையும் உள்ளே அனுமதிக்க ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.
அங்கு உணவு அருந்திக்கொண்டிருந்தவர்கள் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றதைத் தொடர்ந்து சுமார் 30 நிமிடங்களுக்குப் பின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனை ஊழியர்கள் அனுமதித்தனர். அதுவரை அந்நாட்டின் பிரதமர் உணவகத்தின் வெளியிலேயே காத்திருந்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் நம்மூரில் நடக்க நிச்சயம் வாய்ப்பில்லை. அப்படியே ஏதாவதொரு உணவகம் நம்மூர் அரசியல்வாதிகளை உள்ளேவிட மறுத்திருந்தால், மறுநாள் அந்த உணவகமே இருந்திருக்காது அல்லது குறைந்தபட்சம் அங்கிருக்கும் கண்ணாடிகள் சிதறியிருக்கும்.
ஆனால், அதன்பின் ஜெசிந்தா செய்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உணவக ஊழியர்கள் முறையாக கரோனா நடைமுறைகளை பின்பற்றியதாகத் தெரிவித்த அவர், உணவகத்தின் சேவை சிறப்பாக இருந்ததால் A+ ரேட்டிங் வழங்கி ஆச்சரியப்படுத்தினார்.
தற்போது மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெசிந்தாவிடம் 2023ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், "இப்போதுதான் 2020ஆம் ஆண்டு தேர்தல் முடிந்துள்ளது. நான் இந்த தருணத்தை அனுபவிக்கிறேன். சில நாள்கள் விடுமுறை எடுக்கவுள்ளேன்" என தெரிவித்தார்.
மக்களுக்காகத் தொடர்ந்து மக்களுடன் பணியாற்றி ஜனநாயகத்தை எப்போதும் தூக்கிப்பிடிக்கும் ஜெசிந்தா, உங்களை மக்கள் தற்போது மீண்டும் அங்கீகரித்துள்ளனர். எனவே, கொஞ்சம் 'சில்' செய்யுங்கள்!
இதையும் படிங்க: நேர்காணலுக்கு மத்தியில் நிலநடுக்கம்: பிரதமர் நிகழ்ச்சியில் பரபரப்பு!