இதுதொடர்பாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது செய்தியாளர்களிடம் கூறுகையில்," விளாடிவோஸ்டாக் நகரில் பிரதமர் மோடியை நான் சந்தித்தபோது காஷ்மீர் பிரச்னை குறித்து அவரிடம் புகார் எழுப்பினேன். அங்கு வன்முறை வெடிக்கக்கூடாது என்பதே எங்களின் எண்ணமாக உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் யாருக்கும் நாங்கள் ஆதரவு அளிக்க மாட்டோம். வன்முறை வெடிப்பதைத் தவிர்க்க பேச்சுவார்த்தையின் மூலம் இருநாடுகளும் தீர்வு காண வேண்டும்" என்றார்.
கடந்த மாதம், நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மகாதீர் முகமது, "ஜம்மு-காஷ்மீரை இந்தியா வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது" எனக் காட்டமாகத் தெரிவித்தார். மேலும், காஷ்மீர் பிரச்னையை இருநாடுகளும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.
இதன் காரணமாக, அவர் மீது கோபம் கொண்டு இந்தியர்கள் சமூக வலைதளங்களில், மலேசியப் பொருட்களைப் புறக்கணிக்குமாறுக் கூறி #BoycottMalaysia என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்டாக்கி வந்தனர்.
இதனால் மலேசிய-இந்திய வர்த்தகத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்ற கேள்விக்குப் பதிலளித்த மலேசிய பிரதமர், "இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் அரசமைப்பு சட்டத்தின் 370 பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ரத்து செய்தது. தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா கொண்டுவரப்பட்டு அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.