ஈரான் நாட்டுடன் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் 2015இல் அணுசக்தி ஒப்பந்தம் செய்தன. இந்த ஒப்பந்தத்திலிருந்து 2018ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது.
இதையடுத்து ஈரான் மீது பொருளாதாரத் தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில் அண்மையில் ஈரான் ராணுவ தளபதி அமெரிக்க பாதுகாப்புப் படை நடத்தி ஆளில்லாத விமான தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையில் அமெரிக்கா, அதன் ஆதரவு நாடுகள் மீது ஈரான் குற்றச்சாட்டை முன்வைத்தது. இது குறித்து பேசிய ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லாரிஜானி, “அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை.
மாறாக ஐரோப்பிய நாடுகள் (இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி) ஆகியன ஈரானுக்கு எதிராகப் புகாரளித்துள்ளன. இது தீவினையானது. அமெரிக்காவின் சர்வாதிகாரத்தைக் கண்டு இந்நாடுகள் அஞ்சுகின்றன” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக நடந்தால் ஒப்பந்தம் குறித்து கடுமையான நடவடிக்கையை எடுப்போம். யாரும் எதிர்பாராத மிகவும் கடுமையான விளைவுகள் ஏற்படும்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக அந்நாட்டின் முக்கியத் தலைவரான அயதுல்லா அலி கமேனி, ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் அடிமைகள் என வர்ணித்தார். இதற்குப் பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'வார்த்தைகளில் கவனம் தேவை' என்று மிரட்டும் தொனியில் பதிலளித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: 'வார்த்தைகளில் கவனம் தேவை' - ஈரான் தலைவருக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை