ஒலிம்பிக்ஸ் 2020 போட்டி கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் பரவிய கரோனா தொற்று பாதிப்பால், போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் வருகிற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடத்திட ஒலிம்பிக் குழு திட்டமிட்டுள்ளது. ஆனால், தற்போதும் ஜப்பானில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. கடந்த 15 நாள்களில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் குறிப்பிட்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்த வேண்டும் என ஜப்பான் நாட்டின் மருத்துவர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழுவினர், பாதுகாப்பு வழிமுறையுடன் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் பணிகளைச் செய்து வருகின்றனர். பாதுகாப்பான முறையில் பயோ செக்யூர் பபுளில், பார்வையாளுக்கு அனுமதி வழங்காமல் நடத்திவிடலாம் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் குழுவின் துணைத் தலைவர் ஜான் கோட்ஸ், " கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பால், ஜப்பான் மற்றும் பிற பகுதிகளில் அவசர நிலை அமலில் இருந்தாலும், ஒலிம்பிக் போட்டிகள் நிச்சயம் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.