நியூயார்க்(அமெரிக்கா): ஒவ்வொரு ஆண்டும் பத்திரிகைத் துறையில் மிகச்சிறந்த ஊடகப்பணி மேற்கொண்டவர்களுக்கு, அமெரிக்காவின் கொலாம்பியா பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை சார்பில் புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான 105ஆது புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் இஸ்லாமிய உய்குர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான சீனாவின் தடுப்பு முகாம்களை செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, அம்பலப்படுத்தி எழுதிய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மேகா ராஜகோபாலனுக்கு இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதை மேகா ராஜகோபாலன் இண்டர்நெட் மீடியா, பஷ்ஃபீட் நியூஸ் ஆகிய செய்தி ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து பெறுகிறார்.
மேகா ராஜகோபாலனும் அவரது சகாக்களும் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் 3 டி கட்டடக்கலை உருவகப்படுத்துதல்களைப் பயன்படுத்தி, தடுப்பு முகாம்களில் இருந்த இரண்டு டஜன் முன்னாள் கைதிகளை கண்டறிந்தனர். பின்னர் அவர்களிடம் மேகா ராஜகோபாலன் நடத்திய நேர்காணலில், அங்கு உய்குர் மற்றும் பிற சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த ஒரு மில்லியன் இஸ்லாமியர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது உலகிற்கு தெரிந்தது.
மேகாவுக்கு தடை விதித்த சீன அரசு
இந்த ஊடகப்பணிக்காக மேகா ராஜகோபாலன், சீன அரசினரால் செய்திப் பணியை செய்யமுடியாமல் தடைவிதிக்கப்பட்டார்.
இதையடுத்து அண்டை நாடான கஜகஸ்தானுக்குச் சென்று, அங்கு தப்பி ஓடிய முன்னாள் கைதிகளை மேகா ராஜகோபாலன் பேட்டி கண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அதேபோல், புளோரிடாவில் உள்ள ஒரு சட்ட அமலாக்க அலுவலர் குழந்தைகளைக் கண்காணிக்கும் பணியை, தவறாகப் பயன்படுத்துவதை, அம்பலப்படுத்தி எழுதிய மற்றொரு இந்தியப் பத்திரிகையாளர் நீல் பேடிக்கும் இவ்விருது பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
அதேபோல், அமெரிக்காவில் இனவெறி காரணமாக ஜார்ஜ் பிளாய்ட் என்பவர், கழுத்து நெரித்து காவல் துறையால் கொல்லப்பட்ட சம்பவத்தை வீடியோவாக எடுத்த 18 வயது நிரம்பிய இளம்பெண் டார்னெல்லா பிரேஸருக்கும் இவ்விருது பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: மியான்மர் வன்முறையைக்கண்டித்த ஐ.நா.மனித உரிமைகள் கழகம்