அண்டை நாடான இலங்கையில் நாளை (சனிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. ஆளும் தரப்பில் சஜித் பிரேமதாசவும், எதிர்தரப்பில் ராஜபக்சவின் சகோரரான கோத்தபய ராஜபக்சவும் களத்திலுள்ள பிரதான வேட்பாளர்கள்.
இவர்கள் இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. கருத்துக் கணிப்பு முடிவுகள், ராஜபக்சவின் சகோதரருக்கு ஆதரவாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஈடிவி பாரத் தலைமை செய்தி ஆசிரியர் நிஷாந்த் சர்மா, இலங்கை அதிபரின் ஆலோசகர் சமன் வீரசிங்கவை இலங்கைக்கு சென்று நேரடியாக பிரத்யேகமாக பேட்டி கண்டார். நமது செய்தி தலைமை ஆசிரியரின் கேள்விக்கு சமன் வீரசிங்கவின் பதில்கள் வருமாறு:
கேள்வி: இந்தியா இலங்கை உறவு எவ்வாறு இருக்கிறது?
பதில்: இலங்கையின் கதவுகள் அனைவருக்காகவும் திறந்திருக்கும். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் கொழும்புவில் உள்ளன. டெல்லி சிறப்பாக செயல்படுகிறது.
இந்தியா இலங்கையிடையே ஆயிரம் ஆண்டுகள் பழையான உறவுகள் உள்ளன. அந்த கலாசார உறவுகள் தொடர்கிறது. இந்தியாவின் ஆதரவு எங்களுக்குத் தேவை. ஆகவே பீஜிங் (சீனா) எங்களுடன் காட்டும் நெருக்கம் குறித்து கவலைக் கொள்ள தேவையில்லை. டெல்லியிலிருந்து (இந்தியா) இன்னும் நிறைய முதலீட்டு திட்டங்கள் இலங்கைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி: சீனாவுடனான கடன் திட்டங்கள் எவ்வாறு உள்ளது?
பதில்: இலங்கையின் வெளிக் கடன்களை பார்க்கும் போது இது கவலைக்குரிய பிரச்னை அல்ல. வளரும் நாடு என்ற வகையில் உலகம் முழுவதுமிருந்து எங்களுக்கு முதலீடுகள் தேவை.
மற்ற நாடுகளுடன் சேர்ந்து, சீன அரசாங்கமும் நிறைய நிறுவனங்களும் இலங்கையில் முதலீடுகளை செய்துள்ளன. அதேபோல் இந்திய நிறுவனங்களும் அரசாங்கமும் இலங்கையில் மேலும் முதலீடுகளை செய்யும் என்று நம்புகிறேன்.
கேள்வி: இந்த கடன்களை எவ்வாறு சமாளிக்க போகிறீர்கள்?
பதில்: வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பது மற்றும் வணிகத்தை எளிதாக்குவது மூலமாக சமாளிக்கலாம். மற்ற ஆசிய நாடுகளைப் போலவே, உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்க இலங்கை பொருளாதார கொள்கைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் போல உலக பொருளாதாரத்தை ஈர்க்க வாய்ப்புகளை எதிர்நோக்குகிறோம்.
புதிய அதிபர் இந்த உண்மைகளை கருத்தில் கொண்டு பொருளாதாரக் கொள்கைகளை வகுக்க வேண்டும். இதனால் சுற்றுலா, விவசாய ஏற்றுமதி என சிறந்த வணிகத்தை மேற்கொள்ள முடியும்.
இதுமட்டுமின்றி புதிய அதிபர் அனைத்து நாடுகளுடனும் ஒரு நல்ல உறவைப் பேண வேண்டும். ஆசிய துணைக் கண்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவ்வாறு நடக்கும்பட்சத்தில் தற்போதுள்ள இந்த உறவு புதிய நிலைக்கு செல்லும். இதனை புதிய அதிபர் முயற்சிப்பார் என்று நம்புகிறேன்.
கேள்வி: மற்ற நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை பேணுவது எவ்வாறு இருக்கிறது. குறிப்பாக சீனாவின் நெருக்கம் அதிகரித்த போதிலும் இந்தியாவுடன் உறவுகளைப் பேணுவதில் இலங்கையின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
பதில்: இந்தியாவும் இலங்கையும் ஒரு உயர்மட்ட அரசியல் மற்றும் கலாசார உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ஆகவே இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று நம்புகிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தற்போதுள்ள இந்த உறவை புதிய கட்டத்துக்கு எடுத்துச் செல்ல நாங்கள் முயற்சிப்போம்.
இவ்வாறு இலங்கை அதிபரின் ஆலோசகர் சமன் வீரசிங்க, ஈடிவி பாரத் தலைமை செய்தி ஆசிரியர் நிஷாந்த் சர்மாவுக்கு பதிலளித்தார்.
இதையும் படிங்க: தான் அதிபரானால் இலங்கைக்கு புதிய பிரதமர் - சஜித் பிரேமதாச