ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட எந்த தபால்களையும் அந்நாடு ஏற்கவில்லை. இந்தியாவிலிருந்து வரும் தபால்களையும், இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய தபால்களையும் அந்நாடு நிறுத்தி வைத்ததையடுத்து, இந்திய தபால் துறை அலுவலர்களும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய தபால்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”பாகிஸ்தான் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்தியுள்ளது. இது சர்வதேச தபால் சங்கத்தின் விதிகளை மீறிய செயலாகும்.
பாகிஸ்தான் எப்போதும் பாகிஸ்தானைப் போலவே நடந்துகொள்கிறது. சர்வதேச தபால் சங்கத்துக்கு கட்டுப்பட்டு அனைத்து நாடுகளும் இயங்குகின்றன. இந்தியாவுடனான தபால் சேவை, இரு மாதங்களாக பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. எனவே, இந்தியாவும் அத்தகைய நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது” என்றார்.