பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தராக செயல்பட அமெரிக்க தயாராக உள்ளதாகவும், அதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உதவி கேட்டிருந்ததாகவும் கூறினார்.
இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், காஷ்மீர் விவகாரத்துக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே இந்தியாவின் நிலைப்பாடாகவுள்ளது என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், "காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் கருத்து ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இப்பிரச்னையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.