பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில் இருக்கும் கோட்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரவீனா, ரீனா என்ற சிறுமிகள். இவர்கள் அண்மையில் ஒரு குழுவினரால் கடத்தப்பட்டனர். அதன்பிறகு அவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக இரண்டு வீடியோக்களும் வெளியாகின.
அந்த வீடியோக்களில் ஒன்றில், தங்கள் விருப்பப்படிதான் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் கட்டாய மதமாற்றம் செய்ததாக அவர்களது பெற்றோர் கூறினர்.
இதனையடுத்து, அவர்களது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரிக்குமாறு பாகிஸ்தானில் இருக்கும் இந்திய உயர் ஆணையத்திடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.