அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் நிலவிவரும் நிலையில், சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒன்றான ஹுவாவே மீது அமெரிக்கா தடைவிதித்துள்ளது.
இதன் காரணமாக, ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் ஹுவாவேவுடனான தங்களது உறவை முறித்துக்கொண்டன. ஹுவாவேவை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் நோக்கில், அந்நிறுவனத்தின் மீது தடை விதிக்குமாறு மற்ற நாடுகளை அமெரிக்கா வலியுறுத்திவருகிறது.
இந்நிலையில், இது குறித்து ஹுவாவே தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அந்நிறுவனத்தினஅ நிறுவனர் ரென் ஷெங்ஃபெய், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 30 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்பிலான தயாரிப்புப் பணிகள் நிறுத்தப்படவுள்ளன எனத் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் உற்சாகத்துடன் மனித சமுதாயத்துக்கு தாங்கள் பணி செய்வோம் எனவும் ரென் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அடுத்த தலைமுறையை ஐந்தம் தலைமுறை அலைக்கற்றை அதிவேக இணைய சேவைக்குத் தேவையான கருவிகள் தயாரிப்பில் ஹுவாவே நிறுவனம் முதலிடத்தில் விளங்கும் என சூளுரைத்த அவர், தங்கள் நிறுவனம் 2018ஆம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ஆறு லட்சம் கோடி) வருவாய் ஈட்டியுள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.