பாகிஸ்தானில் சிறுபான்மையின பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவது என்பது தொடர் கதையாகி வருகிறது. அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தை அடுத்த ஃபைசலாபாத்தின் லியாகத் கிராமத்தைச் சேர்ந்தவர் (கிறிஸ்தவர்) அப்சல் மாசிஹ். இவரது மகள் இஷால் அப்சல் (14). ஜனவரி 06 அன்று காலை 8:30 மணியளவில் அவர் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். ஆனால், நெடுநேரமாகியும் சிறுமி திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் தேடி அலைந்துள்ளனர்.
இதனையடுத்து, பைசலாபாத்தின் ஜரன்வாலா சாலையில் உள்ள சதார் காவல் நிலையத்தில் இஷால் அப்சலின் தந்தை அப்சல் மாசிஹ் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்நிலையில், பைசலாபாத்தை அடுத்துள்ள குளம் அருகே ஒரு சிறுமியின் உடல் கிடப்பதாக சதார் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அது இன்று காலை காணாமல் போன சிறுமி தான் என்பது தெரியவந்தது.
சிறுமியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பரிசோதனை முடிவில், சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. இவ்விவகாரம் நாடு முழுவதும் பெரும் போராட்டங்களைத் தூண்டியிருக்கிறது.
கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதிக்கேட்டு, ஹெச்.ஆர்.எஃப்.பி உதவியுடன் பைசலாபாத் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஹெச்.ஆர்.எஃப்.பி (பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைப்பு) தலைவர் நவீத் வால்டர்,“ பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக இளம்பெண்களை கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்து பின்னர் கட்டாய திருமணம் செய்து கொள்ளப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
சிறுபான்மை சமூகங்களின் சிறுமிகள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. புள்ளி விவரங்களின் அடிப்படையில், ஒரு நாளைக்கு 8 முதல் 10 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த அராஜகங்களை பற்றி மனித உரிமை அமைப்புகளோ அல்லது அரசியல்வாதிகளோ பேசக்கூட முன்வரவில்லை. பாதிக்கப்பட்டோருக்கு நீதிமன்றங்களில்கூட நீதி கிடைப்பதில்லை” என கூறினார்.
சிறுமி இஷால் அப்சலின் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேக அடிப்படையில் இருவரை கைது செய்த காவல் துறையினர், பின்னர் அவர்களை விடுவித்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : ஜோ பைடன் பதவியேற்பு விழா: புதினுக்கு சென்ற அழைப்பிதழ்