ஹாங்காங்: உலகம் முழுவதும் கரோனா, ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிவேகமாக பரவிவருகிறது. இதனால் உலக நாடுகள் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றன. இதனிடையே, ஹாங்காங்கில் உள்ள வளர்ப்புபிராணிகள் கடையின் ஊழியருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, கடையில் உள்ள பாலூட்டிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் 11 வெள்ளெலிகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்குள்ள 100 பாலூட்டிகள் உள்பட 2,000 வெள்ளெலிகளை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தொற்று உறுதியான கடையில் டிசம்பர் 22 முதல் வெள்ளெலியை வாங்கிய உரிமையாளர்களுக்கு, அவற்றை கருணைக்கொலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் ஹாங்காங் முழுவதும் எலிகள், வெள்ளெலிகள், சிறிய பாலூட்டிகளின் இறக்குமதி, விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக எலிகள், வெள்ளெலிகள் ஆகியவற்றின் மீதான ஆய்வுகளில், கரோனா தொற்று குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்தியதாக முடிவுகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐசியூ.,வில் உலாவிய எலிகளை அப்புறப்படுத்திய மருத்துவமனை நிர்வாகம்!