ஹாங்காங்கில் கைது செய்யப்படும் நபர்களை சீனாவுக்கு நாடு கடத்தி அங்குள்ள நீதிமன்றங்களில் விசாரணைக்குட்படுத்த வழிவகை செய்யும் 'கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதா'வை அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது.
கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதா தற்காலிக ரத்து அறிவிப்பு
இச்சட்டம் தங்களது ஜனநாயக உரிமையை பறித்துவிடும் எனக்கூறி ஹாங்காங் குடிமக்கள் கடந்த ஜூன் மாதம் போராட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து அம்மாதம் முழுவதும் நடைபெற்ற தொடர் போராட்டத்தை அடுத்து, கைதிகள் பரிமாற்ற மசோதாவை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஹாங்காங் நிர்வாக அலுவலர் கேரி லாம் அறிவித்தார்.
ஆனால் நிர்வாக அலுவலரின் அறிவிப்புக்கு சமரசமாகாத ஹாங்காங் மக்கள்...
- கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை அரசு நிரந்தரமாக திரும்பப்பெற வேண்டும்,
- போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,
- ஹாங்காங் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை காக்க வழிவகை செய்ய வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வார இறுதி நாட்களில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், விமானிகள், போக்குவரத்து ஊழியர்கள் இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டனர்.
போராட்டத்தால் பார்வையிழந்த பெண்?
இதனிடையே, ஹாங்காங்கின் பல்வேறு வீதிகளில் ஞாயிறன்று நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள், ரப்பர் புல்லட்டுகளை வீசினர். இதில், ஒரு பெண் பலத்த காயமடைந்ததாகவும் இதனால் அவர் தனது பார்வையை இழந்ததாகவும் வதந்திகள் பரவின.
விமான நிலையத்தை ஸ்தம்பிக்க வைத்த போராட்டக்காரர்கள்
இந்நிலையில், காவல் துறையினரின் அடக்கமுறையை கண்டித்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஹாங்காங் விமானத்துக்குள் நேற்று நுழைந்ததால் விமான நிலையமே ஸ்தம்பித்தது. பின்னர், ஹாங்காங்குக்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.
இதையடுத்து, ஹாங்காங் விமான நிலையத்திலிருந்து போராட்டக்காரர்கள் கலைந்துசென்றதைத் தொடர்ந்து மீண்டும் அங்கு விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வெடிக்கிறது போராட்டம்? 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
எனினும், அங்கு மீண்டும் போராட்டம் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளதாக ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம் எச்சரித்துள்ள நிலையில், 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.