சீனாவின் தன்னாட்சி பிராந்தியங்களுள் ஒன்றான ஹாங்காங்கில் ஜனநாயக உரிமை கோரி, அரசுக்கு எதிராக ஹாங்காங் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கத்தின் தடையையும் மீறி, வார இறுதி நாட்களில் நடக்கும் இந்தப் போராட்டம் பெரும்பாலும் கலவரத்தில் முடிவதால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தீவிரமடைந்து வரும் இந்த ஜனநாயக ஆதரவு போராட்டத்தின் அடுத்த கட்டமாக போராட்டக்காரர்கள், தி ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழக்தை சில நாட்களாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்களை விரட்டும் பொருட்டு ஹாங்காங் காவல் துறையினர் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி, தண்ணீரைப் பீய்ச்சி அடித்துள்ளனர்.
அப்பொழுது, காவல் துறையினரை நோக்கி போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகள், கற்களை வீசியும், அம்புகளை எய்தும் தாக்குதல் நடத்தினர். இதனால் வேறு வழியின்றி அங்கிருந்து வெளியேறிய காவல் துறையினர் அந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை சுற்றி வளைத்துள்ளனர்.
இதையும் படிங்க : நான் உயிருடன் இருப்பதால் உங்களுடன் பேசுகிறேன்': காஷ்மீர் எழுத்தாளரின் கண்ணீர் கதை.!
இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேற முயன்ற சில போராட்டக்காரர்கள் மீது, காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அப்போது கைது செய்யப்படுவோமோ என்று சுதாரித்துக்கொண்டு போராட்டக்காரர்கள் அங்கிருந்து பின்வாங்கினர்.
இது குறித்து பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் கென் வூ பேசுகையில், "பல்கலைக்கழக வளாகத்துக்குள் குறைந்தது 500 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்குத் தேவையான குடிநீர் உள்ள போதிலும், போதுமான அளவுக்கு உணவு இல்லை. கைதுக்கு பயந்து கொண்டு போராட்டக்காரர்கள் வெளியில் வரமாட்டார்கள்" எனக் கூறினார்.
ஹாங்காங் காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சியோங் வான் ரோடு, தெற்கு பாலம் வழியாகப் பல்கலைக் கழகத்தை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேறலாம். ஆனால், தங்களிடம் உள்ள ஆயுதங்களையும், கேஸ் மாஸ்குகளையும் அவர்கள் களைய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : பிகினி உடையில் வந்தால் இலவச எரிவாயு - படையெடுத்த ஆண்கள் கூட்டம்!