சீனாவின் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 முதலில் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து சீனாவில் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியான ஹாங்காங்கிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனால் சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற டிஸ்னிலாண்ட் ஹாங்காங் ஜனவரி மாதம் முதல் மூடப்பட்டது. சர்வதேச அளவில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் ஒரு இடமாக டிஸ்னிலாண்ட் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சீன அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு சீனா தற்போது மீண்டும் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது.
அதன்படி, வரும் ஜூன் 18ஆம் தேதி முதல் டிஸ்னிலாண்ட் ஹாங்காங் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்னிலாண்ட் பூங்காவுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க்குகளை அணிந்திருக்க வேண்டும். பூங்காவில் நுழையும்போது அவர்களின் வெப்பநிலையும் கண்காணிக்கப்படும் என்று டிஸ்னிலாண்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சர்வதேச அளவில் திறக்கப்படும் இரண்டாவது டிஸ்னிலாண்டாக ஹாங்காங் நகரிலுள்ள டிஸ்னிலாண்ட் உள்ளது. முன்னதாக, கடந்த மாதம் ஷாங்காய் நகரிலுள்ள டிஸ்னிலாண்ட்டும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடந்தது என்ன? ஆப்பிரிக்க அமெரிக்கர் கொல்லப்பட்டது குறித்த வீடியோ வெளியீடு