மே மாதம் 3ஆம் தேதி ஒடிசாவைத் தாக்கிய ஃபானி புயலால் 64 பேர் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் லட்சகணக்கான மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. இதன் காரணமாக கடலோர மாவட்டத்தில் வசித்த லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடமைகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஹாங்காங் அரசு ஃபானி புயலால் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில், 9மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.62 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை அங்கு வெளியாகும் பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டுள்ளன. இந்த தொகை மூலம் 45,100 பேர் அடிப்படை வசதிகளான தண்ணீர், சுகாதார வசதிகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கு இந்த நிதி பயன்படும். மேலும் இந்த நிதியுதவி சரியான தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்பதை அறியும் வகையில், நிவாரண பணிகள் முடிந்தவுடன், அதுதொடர்பான தணிக்கை மதிப்பீடு அறிக்கையை தாக்கல் செய்யவும் ஹாங்காங் அரசு அறிவுறுத்தியுள்ளது.