பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து வந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அதே வேளையில், சிறப்பு அந்தஸ்து பெற்ற தன்னாட்சி பிராந்தியமாக 50 ஆண்டுகள் ஹாங்காங் செயல்படும் வகையில் சீனா சட்டம் இயற்றியது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஹாங்காங் மக்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹாங்காங் அரசின் சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்ற மசோதாவை எதிர்த்து, இப்போராட்டமானது தொடங்கப்பட்டது. காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் தீவிரமடையவே அங்குச் சீனா தனது ராணுவத்தை அனுப்பியது.
நடுவில் இப்போராட்டத்தின் வேகம் குறைந்த நிலையில், கடந்த வாரம் முதல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இப்போராட்டத்தில் ஒரு இளைஞர் தீ வைத்து கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கொல்லப்பட்டார்.
துப்புரவுப் பணியாளரான அவர் காவலர்கள் போராட்டக்காரர்கள் மோதிக்கொண்ட போது, செங்கல்லால் தாக்கப்பட்டு போராட்டக்களத்தில் உயிரிழந்தார்.
சர்வதேச பார்வை இவ்விவகாரத்தில் திரும்பி வரும் நிலையில், சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்ற மசோதா சிக்கலை, விரைவில் தீர்க்க சீன அரசும் ஹாங்காங் அரசும் தீவிர முனைப்புக் காட்டி வருகிறது.