ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், அதிரடி ஆட்டக்காரருமான ஆடம் கில்கிறிஸ்ட் இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடர் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், "இந்தியாவில் இருப்பவர்களுக்கு எனது வாழ்த்துகள். கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது; இச்சூழலில் அங்கு நடைபெறும் ஐபிஎல் தொடர் பொருத்தமற்றது இல்லையா அல்லது மக்களைத் திசைதிருப்புவதற்காகப் போட்டிகள் நடத்தப்படுகின்றனவா? எதுவாயினும் இந்தியர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துவருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து, பிராண வாயு பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.
இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அவசியமா என்ற கேள்வி சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் நிலவிவந்தது. இச்சூழலில் ஆடம் கில்கிறிஸ்டின் பதிவு ட்விட்டர்வாசிகள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.