பசிபிக் தீவுகளின் ஒரு பகுதியான பிஜியை சக்திவாய்ந்த யாசா சூறாவளி தாக்கியது. சூறாவளி கடந்துசென்ற பாதையில் அதிகளவிலான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகத்தின் இயக்குநர் வாசிட்டி சோகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "சூறாவளி மணிக்கு 345 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தை வரும் நாள்களில் மதிப்பிடுவோம்.
இதுவரை இந்தச் சூறாவளி பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அதிகளவிலான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் புயலின் மையகண் வனுவா லெவு வழியாக நகர்ந்தது.
இது தலைநகரான சுவாவையும், பிஜியின் மிகப்பெரிய தீவான விடி லெவுவில் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலத்தையும் தாக்காமல் பாதை மாறி சென்றதால் பாதிப்பின் அளவு குறைந்தது" என்றார்.
சூறாவளி வெள்ளிக்கிழமை முதல் பலவீனமடைந்துவருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இருப்பினும், வெள்ளத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இடைவிடாது பெய்துவரும் தொடர் மழை காரணமாக, சுவா விமான நிலையம் அருகில் அமைந்துள்ள ரேவா நதியின் நீர்மட்டம் அதிகரித்துவருகிறது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயல் தாக்கத்தால் நகரின் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்புகள், தகவல்தொடர்பு ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், நகரின் பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன.
சூறாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனை மாநில இயற்கைப் பேரிடராக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நியூசிலாந்திலிருந்து ஹவாய் செல்லும் பாதையில் அமைந்துள்ள பிஜியில் சுமார் ஒன்பது லட்சத்து 30 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஐ.நா. தரவரிசை அட்டவணை வெளியீடு: மனிதவள மேம்பாட்டில் இந்தியா பின்னடைவு