சர்வதேச அளவில் பணமோசடிகளை தடுப்பதற்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கு பணம் செல்வதைத் தடுப்பதற்கும் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு (FATF) செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பு ஜி-7 நாடுகளால் உருவாக்கப்பட்டதாகும்.
இதுவரை, இந்த அமைப்பு ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளை தடைசெய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் சேர்ந்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெறும் நாடுகளால் உலக வங்கி, சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்.) உள்ளிட்ட மேம்பாட்டு வங்கிகளிடமிருந்து நிதியுதவி பெறமுடியாது.
இந்நிலையில், பயங்கரவாதிகளுக்குச் செல்லும் நிதியைத் தடுக்கத் தவறியதாக பாகிஸ்தானை கடந்தாண்டு 'க்ரே' (Grey) பட்டியலில் சேர்த்தது சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு. மேலும், பயங்கரவாதிகளுக்குப் பணம் செல்வதைத் தடுக்கவில்லை என்றால் அந்நாட்டைத் தடை செய்யப்பட்ட நாடுகள் பட்டியலில் (கறுப்புப் பட்டியல்) சேர்த்துவிடுவோம் என பிப்ரவரி மாதத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. (க்ரே பட்டியல் என்றால் தடைசெய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் சேர்வதற்கு முன்பான எச்சரிக்கை குறியீடு)
பாகிஸ்தானுக்கு விதித்திருந்த எச்சரிக்கைக் காலம் வரும் செப்டம்பர் மாதத்தோடு முடியவுள்ள நிலையில், பயங்கரவாதிகளுக்குச் செல்லும் நிதியுதவிகளைத் தடுக்கும் கடமையில் பாகிஸ்தான் பொறுப்பின்றி செயல்படுவதாகவும், அது குறித்து அந்நாடு விரைந்து செயல்படவில்லை என்றால் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற நேரிடும் என சமீபத்தில் அந்த அமைப்பு கடுமையாக சாடியிருந்தது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் மார்ஷல் பில்லிங்ஸ்லே தெரிவிக்கையில், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு செல்லும் பணத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும், அப்படி அந்நாடு நடவடிக்கை எடுக்கத் தவறினால் தடைசெய்யப்பட்ட நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே, நிதி நெருக்கடியில் தவித்துவரும் பாகிஸ்தான் தடைசெய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் இடம்பெற நேர்ந்தால், அந்நாடு பொருளாதார ரீதியாக கடுமையான சிக்கல்களை சந்திக்க நேரிடும்.