மியான்மரில் புதிதாக ஆட்சியில் அமர்ந்த அரசுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இச்சூழலில், மியான்மர் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்து வைத்தது.
இதனால், அந்நாட்டில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. ராணுவம் கையில் மியான்மர் உள்ளது பெரும் சலசலப்பை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் உரிய அனுமதியின்றி விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில சமயங்களில், இணைய சேவைகள் முடக்கப்பட்டன. விக்கிப்பீடியாவும் அனைத்து மொழிகளிலும் ராணுவத்தினர் முடக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ராணுவத்தினரின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு உலகம் முழுக்க கடும் கண்டனங்கள் குவிந்தன. பேஸ்புக் தளம் மியான்மர் நாட்டில் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இயங்கி வருகிறது. போராட்டக்காரர்கள் பலர் போராட்டங்கள் குறித்த புகைப்படங்கள் தகவல்களை பேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான டாட்மேடவ், பேஸ்புக் வரம்புகளை மீறியதற்காக முடக்கப்பட்டுள்ளது. பலமுறை பேஸ்புக்கின் வரம்புகளை இந்த ராணுவ பக்கம் மீறி வந்ததால் தற்போது முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மியான்மர் ராணுவத்தின் பக்கங்களும், அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து நிறுவனங்களின் பேஸ்புக் பக்கங்களும் முடக்கப்படுவதாக பேஸ்புக் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவானது, இன்ஸ்டாகிராம் செயலிக்கும் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, மியான்மர் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த மியாவடி டிவி, எம்ஆர்டிவி ஆகியவை பேஸ்புக்கால் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இலங்கை - பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!